உலகமே உற்று நோக்கிய இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றி வாகை சூடி அரியணையில் அமர்ந்த அநுர குமார திசாநாயக்க

By John A

Published:

உலகமே உற்று நோக்கிய இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிபர் ரனில் விக்ரம சிங்கே மற்றும் தேசிய மக்கள் சக்தி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். எப்போதும் இல்லாத அளவிற்கு இலங்கையில் ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்தனர். இந்நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் ரணில் விக்ரம சிங்கே படுதோல்வியடைந்தார். தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றார்.

இந்நிலையில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வானது இன்று இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்றது. இதில் அநுர குமார திசாநாயக்க இலங்கை நாட்டின் 9-வது புதிய அதிபராக பொறுப்பேற்றார். அவருக்கு இலங்கை நாட்டின் தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் வெளிநாட்டுத் தூதர்கள், முன்னாள் அதிபர்கள், இலங்கை நாட்டின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இலங்கை அதிபர் தேர்தல் என்பது உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வந்த வேளையில் தற்போது புதிய அதிபர் பொறுப்பேற்றது நாட்டினை மீண்டும் பொருளாதாரத்தில் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது.

அண்மையில் இலங்கை அதிபர் மாளிகை உள்ளிட்ட பல இடங்கள் அங்கு பொருளாதார சீர்குலைவால் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரலாறு காணாத விலைவாசி ஏற்றமும் இலங்கையில் பொருளாதாரத்தினை பெரிதும் பாதித்தது.

புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அதிபர் அநுர குமார திசாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் மோடி, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இலங்கைக்கான இந்தியத் தூதர் உள்ளிட்ட உலக நாட்டின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

பதிவியேற்றபின் செய்தியாளர்களிடம் அதிபர் அநுர குமார திசாநாயக்க பேசும் போது, சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என அனைத்து இலங்கையரின் ஒற்றுமையே இந்த புதிய தொடக்கத்தின் அடித்தளமாக இருக்கும். புதிய மறுமலர்ச்சியான இலங்கையைப் படைப்போம்” என்று கூறினார்.