சீனாவில் உள்ள ஆன்லைன் ஷாப்பிங் மூலம் முக்கிய வங்கிகளின் வெளியே தோண்டப்பட்ட மண்ணை எடுத்து விற்பனை செய்து வருகின்றன. இதை வாங்கினால் செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் பெருகும் என விளம்பரம் செய்து வருகின்றன. இந்த மண்ணின் ஒரு சிறிய பாக்கெட் ரூ.10,500க்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..
சீனாவின் உள்ளூர் பத்திரிகை செய்தியின்படி, மண் விற்பனையாளர்கள் வங்கிகளின் வெளியே இருந்து மட்டுமல்லாமல், வங்கி உள்ளே உள்ள அடுக்குமாடி தோட்டங்கள் மற்றும் பணம் எண்ணும் இயந்திரங்களில் தேங்கிய தூசியை கூட சேர்த்து இந்த மண்ணை சேகரிக்கின்றனர்.
ஒரு ஆன்லைன் விற்பனையாளர், சீனாவின் ஐந்து முக்கிய வங்கிகளில் இருந்து மண்ணை சேகரித்ததாக தெரிவித்துள்ளார். அந்த வங்கிகள்:
பாங்க் ஆஃப் சீனா (Bank of China)
இந்தஸ்ட்ரியல் & கமெர்ஷியல் பாங்க் ஆஃப் சீனா (ICBC)
அக்ரிகல்ச்சரல் பாங்க் ஆஃப் சீனா (ABC)
சீனா கன்ஸ்ட்ரக்ஷன் பாங்க் (CCB)
பாங்க் ஆஃப் கம்யூனிகேஷன்ஸ் (BOCOM)
அவர் கூறுகையில், மிகக் குறைந்த விலையில் “வங்கி மண்” விற்பனை செய்யப்படும். ஒரு பாக்கெட் ரூ.260க்கு கிடைக்கும். இதை வீட்டில் வைத்தால் 99.999% செல்வம் தரும் என விளம்பரம் செய்துள்ளார். விற்பனையாளர்கள் கூறும் பரபரப்பு அறிக்கை
இன்னொரு ஆன்லைன் விற்பனையாளர் வங்கிகளிலிருந்து மண்ணை தோண்டி எடுத்து அதை பேக்கிங் செய்வதை நிரூபிக்க வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வீடியோவில், ஒரு வங்கியின் முன்பாக ஒரு மனிதர் மண் நிறைந்த டப்பாவுடன் நின்று கொண்டு, தன் வாடிக்கையாளருக்கு, மண்ணை சேகரிக்கிறேன் என்று உரக்க கூறும் காட்சியும் உள்ளது. இந்த வீடியோவுக்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும், சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருகிறது. ஒருவர் நான் ஒரு வங்கியின் அருகில் வசிக்கிறேன். ஆனால் எனது செல்வம் ஏன் அதிகரிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் வங்கிகளின் வெளியே இருந்து மண்ணை தோண்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், பல விற்பனையாளர்கள் மண்ணை இரவு நேரத்தில் திருடிக்கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.