பாகிஸ்தான் ராணுவத்தின் வர்த்தக பிரிவான ‘பௌஜி பவுண்டேஷன்’ பங்குகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விற்பனை செய்ய எடுக்கப்பட்டுள்ள முடிவு, அந்த நாட்டின் இறையாண்மை மற்றும் பொருளாதார சுதந்திரம் குறித்த பல விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அதிபரின் சமீபத்திய பாகிஸ்தான் வருகை, வெறும் தனிப்பட்ட சுற்றுலாவாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில், திரைமறைவில் பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துக்களை அடகு வைக்கும் அல்லது விற்பனை செய்யும் பேரங்கள் நடைபெற்றுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ஒரு சாதாரண வர்த்தக ஒப்பந்தம் என்பதை விட, ஒரு பில்லியன் டாலர் கடனுக்காக பாகிஸ்தான் ராணுவத்தின் முதுகெலும்பாக கருதப்படும் ஒரு அமைப்பை அந்நிய நாட்டுக்கு தாரைவார்க்கும் முயற்சியாகவே அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.
பௌஜி பவுண்டேஷன் என்பது பாகிஸ்தானில் ஒரு சாதாரண நிறுவனம் அல்ல; அது ராணுவ அதிகாரிகளின் நலன், ஓய்வூதியம் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்துடன் நேரடி தொடர்புடைய ஒரு சமூக நல சங்கமாக செயல்படுகிறது. வரி சலுகைகள் தேவைப்படும்போது அது ‘தனியார் அமைப்பு’ என்றும், அரசு ஒப்பந்தங்கள் தேவைப்படும்போது அது ‘ராணுவ அமைப்பு’ என்றும் இரட்டை வேடம் போடும் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பது என்பது, பாகிஸ்தான் ராணுவத்தின் வர்த்தக ஏகபோகத்தில் விரிசல் விழுவதை காட்டுகிறது. குறிப்பாக, இஸ்ஹாக் தார் போன்ற அமைச்சர்கள் கணக்கு வழக்குகளில் தில்லுமுல்லு செய்து, பாகிஸ்தான் ஏர்லைன்ஸின் நஷ்டத்தை ஈடுகட்டவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடனை சரிகட்டவும் இந்த ‘மக்கி’ எனப்படும் தெளிவற்ற ஒப்பந்தத்தை முன்னெடுத்துள்ளதாக சுஷாந்த் சரீன் போன்ற மூத்த ஆய்வாளர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.
பாகிஸ்தானின் மிக முக்கியமான சொத்துக்களான கராச்சி துறைமுகம், தொலைத்தொடர்புத் துறை மற்றும் விமான நிலையங்கள் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றிருக்கும் நிலையில், தற்போது ராணுவத்தின் நேரடி நிறுவனத்திலும் அவர்கள் கால் பதிப்பது பாகிஸ்தானின் ‘டீப் ஸ்டேட்’ எனப்படும் ராணுவ கட்டமைப்பிற்குள் அமீரகம் ஒரு இருக்கையை பெறுவதற்கு சமமாகும். பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் ஏதேனும் சிக்கல் என்றால் தஞ்சம் புகும் இடமாக அமீரகம் இருப்பதால், அந்த நாட்டின் அழுத்தங்களுக்கு பணிய வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் ராணுவம் உள்ளது. இது அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பிலும், ராணுவத்தின் ரகசிய நடவடிக்கைகளிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலையீடு அதிகரிக்க வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மறுபுறம், கத்தார் போன்ற நாடுகள் பாகிஸ்தானிடமிருந்து மெல்ல விலகி செல்வதும் கவனிக்கத்தக்கது. பாகிஸ்தான் தனது ஒப்பந்தங்களை சரியாக நிறைவேற்றாதது மற்றும் தேவையற்ற ராஜதந்திர மோதல்களை உருவாக்கியதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் கத்தார் ஒரு மையப்புள்ளியாக இருந்தபோது, பாகிஸ்தானின் சில ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் கத்தாரைக் கடுமையாக விமர்சித்தனர். இந்த ராஜதந்திரத் தோல்விகளை மறைக்க, தற்போது அமீரகத்தை நோக்கி பாகிஸ்தான் தஞ்சம் புகுந்துள்ளது. ஆனால், அரபு நாடுகள் இப்போது முன்பை போல இலவசமாக பணம் தருவதில்லை; அவர்கள் ஒவ்வொரு டாலருக்கும் ஈடாக பாகிஸ்தானின் மதிப்புமிக்க சொத்துக்களையே முதலீடாக கேட்கின்றனர்.
பாகிஸ்தானின் இந்த மோசமான பொருளாதார சூழலை பயன்படுத்திக் கொண்டு, அந்நாட்டு ராணுவம் தனது செல்வாக்கை அண்டை நாடுகளில் குறிப்பாக பங்களாதேஷில் மீண்டும் நிலைநாட்ட முயல்கிறது. பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை பயன்படுத்தி, அங்கிருக்கும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தூண்டிவிட்டு, மீண்டும் ஒரு பயங்கரவாத பாதையை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிடுகிறது. 2005-ம் ஆண்டு இருந்த பங்களாதேஷும் பாகிஸ்தானும் இப்போது இல்லை என்றாலும், இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் ஒரே நேரத்தில் பதற்றத்தை உருவாக்கி, ஒரு ‘இரண்டு முனைப் போர்’ சூழலை ஏற்படுத்தலாம் என்பது பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு முட்டாள்தனமான கணக்கீடாக உள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், பாகிஸ்தான் ராணுவம் தனது அதிகாரத்தை தக்கவைத்து கொள்ளவும், தனது ஆடம்பர செலவுகளைச் சமாளிக்கவும் நாட்டின் ஒவ்வொரு அங்கத்தையும் விற்பனை செய்து வருகிறது. பௌஜி பவுண்டேஷன் பங்குகள் விற்பனை மற்றும் பி.ஐ.ஏ விமான நிறுவனத்தின் நிர்வாக மாற்றம் போன்றவை, பாகிஸ்தான் ராணுவம் ஒரு ‘கூலிப்படை அரசாக’ மாறிவருவதையே உறுதிப்படுத்துகின்றன. தனது நாட்டில் பாதுகாப்பை வழங்க துப்பில்லாத ராணுவம், உலகம் முழுவதும் தனது சேவையை விற்க முயல்வது ஒரு ‘ஸ்ட்ராடஜிக் ஓவர்ரீச்’ ஆகும். இது இறுதியில் பாகிஸ்தானை ஒரு இறையாண்மையற்ற, கடன் கொடுத்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொம்மை நாடாக மாற்றும் அபாயம் உள்ளது என சர்வதேச அரசியலை கவனித்து வரும் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
