பாகிஸ்தானின் அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான பாகிஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை தீவிரப்படுத்த, கடலில் ஒரு செயற்கைத் தீவை அமைத்து வருகிறது.
இந்த செயற்கைத் தீவு, பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாண கடற்கரையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுஜாவல் அருகே உருவாக்கப்படவுள்ளது.
PPL நிறுவனத்தின் பொது மேலாளர் அர்ஷத் பலேகர், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாட்டின் போது இந்த தகவலை வெளியிட்டார்.
இந்தத் தளம் சுமார் ஆறு அடி உயரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கடலில் ஏற்படும் அதிக அலைகளால், நாள் முழுவதும் இடைவிடாமல் மேற்கொள்ளப்படும் ஆய்வு பணிகள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும் என்று அவர் கூறினார்.
இந்த செயற்கை தீவு திட்டம், பாகிஸ்தானுக்கு இதுவே முதன்முறையாகும். ஆனால், அபுதாபியின் வெற்றிகரமான அனுபவத்தை கொண்டு இந்தத் திட்டத்தை PPL மேற்கொள்வதாக பலேகர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தானின் “மிகப் பெரிய எண்ணெய் இருப்பு” குறித்த தனது ஆர்வத்தை ஒரு சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டதில் இருந்து, பாகிஸ்தானின் எண்ணெய் ஆய்வு முயற்சிகள் புதிய உத்வேகத்தை பெற்றுள்ளன.
அதன் பிறகு, உள்ளூர் நிறுவனங்களான PPL, மாரி எனர்ஜிஸ் லிமிடெட் மற்றும் பிரைம் இன்டர்நேஷனல் ஆயில் அண்ட் காஸ் கோ ஆகியவற்றுக்குக் கடலோர ஆய்வு உரிமங்களை பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது.
செயற்கை தீவின் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவடையும் என்றும், அதை தொடர்ந்து உடனடியாக ஆய்வு பணிகள் தொடங்கும் என்றும் பலேகர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 25 ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்ய நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
ஆனால், பாகிஸ்தானில் கணிசமான எண்ணெய் இருப்பு உள்ளது என்பதற்கு நம்பகமான ஆதாரம் இல்லை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த 2019-இல் கராச்சி கடற்கரைக்கு அருகில் கெக்ரா-1 (Kekra-1) கிணற்றை துளையிடும் முயற்சி வெற்றி பெறாததால், அமெரிக்காவின் எக்ஸான் மொபில் போன்ற பெரிய நிறுவனங்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறியது. மேலும் இந்த திட்டத்தின் செலவுகள் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த திட்டம் அபுதாபியின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், PPL வெளியிட்ட விளக்கத்தின்படி, இது ஒரு தனிப்பட்ட ‘தீவு’ அல்ல, மாறாக கடலோர சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்ட ஒரு மேம்பட்ட தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
