அரசியல் வரலாறுகள் தவறான நபரை நம்புவது, தவறான பக்கத்தில் பந்தயம் கட்டுவது அல்லது தவறான வியூகங்களை மேற்கொள்வது போன்ற பிழைகளால் நிறைந்துள்ளன. ஆனால், ஒருவேளை அரசியல் தவறுகளின் பட்டியலை தயாரித்தால், பாகிஸ்தான் அதில் முதலிடத்தில் இருக்கலாம். அதற்கு காரணம், காபூலில் அவர்கள் செய்த பெருந் தவறு தான்.
பாகிஸ்தான் பல ஆண்டுகளாக தாலிபானுக்கு ஆயுதம் வழங்கி, அவர்களை வளர்த்தது. தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது பாகிஸ்தான் கொண்டாடியது. ஆனால், இப்போது அவர்கள் இருவரும் போரின் விளிம்பில் நிற்கிறார்கள்.
பாகிஸ்தானுக்கும் தாலிபானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சமீபத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. முதல் சுற்று தோஹாவில் நடந்தது, அது ஒரு போர்நிறுத்தத்தை உறுதி செய்தது. இஸ்தான்புல்லில் நடந்த இரண்டாவது சுற்று, ஒரு பரந்த ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டது. ஆனால், அது திட்டமிட்டபடி நடக்கவில்லை.
பாகிஸ்தான் ஆப்கனிடம் இருந்து எதிர்பார்த்தது என்னவென்றால், அவர்கள் TTP (தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான்) அமைப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே. பாகிஸ்தானின் தாலிபான் என்று அழைக்கப்படும் இந்த TTP, ஆப்கானிஸ்தான் தாலிபானுடன் சில இனவாத உறவுகளை பகிர்ந்து கொண்டாலும், அவர்கள் தனித்தனி குழுக்கள். சமீபகாலமாக, இந்த TTP அமைப்பினர் பாகிஸ்தான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் TTP பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் இதை மறுக்கிறது. இஸ்தான்புல்லிலும் அவர்கள் அதையே சொன்னார்கள்: TTP மீது தங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை; அதனால் பாகிஸ்தான் மீதான தாக்குதல்களை தங்களால் தடுக்க முடியாது என்றூ கூறியதால், ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை முறிந்தது. இரு தரப்பிற்கும் இடையே பதற்றமான வார்த்தை பரிமாற்றங்கள் நடந்தன, அதன் பிறகு அவர்கள் வெளியேறினர்.
பேச்சுவார்த்தை முறிந்ததால் பாகிஸ்தான் ஆத்திரமடைந்தது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் “தாலிபான் ஆட்சியை முழுவதுமாக ஒழிப்பதற்கும், அவர்களை மீண்டும் பதுங்குவதற்காக குகைகளுக்குள் தள்ளுவதற்கும் பாகிஸ்தானுக்கு அதன் முழு ஆயுத பலத்தில் ஒரு பகுதியைக் கூட பயன்படுத்த தேவையில்லை.” என்றார். அவருடைய கடுமையான வார்த்தைகள் தாங்கள் உருவாக்கிய அதே தாலிபானை அழிப்பதாக அச்சுறுத்துகிறது.
இஸ்தான்புல் பேச்சுவார்த்தை தோல்வி, குவாஜா ஆசிப் பேச்சு ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையே வெளிப்படையான போரை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
இது மூன்று காரணிகளை பொறுத்திருக்கலாம்:
1. பாகிஸ்தான் இராணுவத்தின் மீதான அழுத்தம்:
இராணுவ தளபதி அசிம் முனீர், பாகிஸ்தானின் மீட்பராக தன்னை கட்டமைக்க முயன்றார். ஆனால், அவரால் தனது நாட்டின் ராணுவ வீரர்களையும் கூட, காப்பாற்ற முடியவில்லை. தன் சொந்த ராணுவத்தையும் மக்களையும் பாதுகாக்க முடியாதவர் எப்படி மீட்பராக இருக்க முடியும்? அதனால், அசிம் முனீர் உள்நாட்டில் கடுமையான அழுத்தத்தில் உள்ளார், இது அவரது நடவடிக்கைகளை தீர்மானிக்கலாம்.
2. இந்தியா குறித்த அச்சம்:
ஆப்கானிஸ்தான் நாட்டை இந்தியா தான் கட்டுப்படுத்துகிறது என்று பாகிஸ்தான் வாதிடுகிறது. பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப், இந்தியா தாலிபானை பயன்படுத்தி தீவிர போரை” பாகிஸ்தானுக்கு எதிராக நடத்துகிறது என்கிறார். இது தவறான வாதமாக இருந்தாலும், பாகிஸ்தான் அப்படித்தான் உணர்கிறது. இது பாகிஸ்தானை இருமுறை யோசிக்க வைக்கும், ஏனெனில், அவர்கள் பார்வையில் இது ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் கூடிய இரு-முனைப் போராக இருக்கும், அதை பாகிஸ்தானால் தாங்க முடியாது.
அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலான வெளிநாட்டு ஆதரவு. அமெரிக்காவிடம் இருந்து அதிக ஆயுதங்கள் கிடைக்கும் என்றும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலிடம் இருந்து உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும் பாகிஸ்தான் நம்புகிறது. அவ்வாறு ஒரு உலகளாவிய ஆதரவு கிடைத்தால், ஒரு பெரிய தாக்குதலை தொடங்குவது அவர்களுக்கு நியாயமானதாக தெரியும்.
ஆனால், தற்போதைய நிலையில், இது சாத்தியமில்லை. மேற்கத்திய நாடுகள் தாலிபான் மீதான கருத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகின்றனர். இந்தியா ஒரு நாட்டுக்கு நல்லது செய்தால், அந்நாடு நம்பத்தகுந்தது என்று எண்ணுகின்றனர். எனவே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உள்பட எந்த நாடும் இன்றைய நிலையில் உதவாது என்றே கணிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு தொல்லை தரும் நிலையில், இந்தியா பதிலடி கொடுப்பதற்கு அவசியம் இல்லாமல், ஆப்கானிஸ்தான் நாடே பாகிஸ்தான் இல்லாமல் செய்துவிடும் நிலை ஏற்படும் போல் தெரிகிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல் தீவிரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளாலே அழிந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதே சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
