பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர், நாட்டின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய பதவி, முனீரை தற்போது பாகிஸ்தானின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மாற்றியுள்ளது. இந்த மாற்றமானது, பாகிஸ்தான் அரசியலில் ராணுவத்தின் செல்வாக்கை மேலும் சட்டப்பூர்வமாக்கி, நாட்டின் அதிகார சமநிலையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.
‘பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி’ என்ற இந்த அதிகாரம் மிக்கப் பதவி, கடந்த நவம்பர் 1-ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய 27-வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் உருவாக்கப்பட்டது.
சிடிஎஃப் (CDF) என்ற புதிய பொறுப்பின் மூலம், ஜெனரல் முனீர் இப்போது நாட்டின் முப்படைகளான ராணுவம், கடற்படை, மற்றும் விமானப்படை ஆகிய அனைத்திற்கும் தலைவராக உள்ளார். முப்படைகளின் மிக மூத்த பதவியாக இருந்த கூட்டுப்படை தலைவர்கள் குழுவின் தலைவர் பதவி தற்போது ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பாகிஸ்தான் இராணுவத்தின் முழு அதிகாரத்தையும் முனீர் கைகளில் ஒப்படைக்கிறது. மிக முக்கியமாக, நாட்டின் அணு ஆயுத அமைப்புகளின் முழு பொறுப்பும் இப்போது அசிம் முனீரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
புதிய சட்டத் திருத்தங்கள், முனீருக்கு அதிபருக்கு சமமான சட்ட பாதுகாப்பை வழங்குகின்றன. அவர் தனது பதவியை வகித்த பின்னும், வாழ்நாள் முழுவதும் தனது ராணுவ பதவியையும், சிறப்பு சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்வார். அதிபரை போல, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவர் இந்த பதவியிலிருந்து நீக்கப்பட முடியும். இது ராணுவ தலைமைக்கு இதுவரை இல்லாத நிரந்தர அதிகாரத்தை வழங்கியுள்ளது.
ஜெனரல் முனீரின் இந்த அசுரத்தனமான வளர்ச்சி, அவரது அரசியல் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி மாற்றத்தின் மறுபக்கமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இம்ரான் கான், முனீரை சக்திவாய்ந்த உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் பதவியிலிருந்து, பொறுப்பேற்ற 8 மாதங்களிலேயே நீக்கினார். ஆனால், இம்ரான் கான் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, நிலைமை மாறியது; ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கம் முனீரை மீண்டும் ராணுவ தலைமைக்கு கொண்டு வந்தது. அன்றிலிருந்து, இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கடைசி ராணுவ தலைவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் ஆவார். அவர் 1999-ல் ஆட்சி கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றினார். அதன் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகங்கள் ஆட்சி செய்தாலும், பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலில் ராணுவத்தின் செல்வாக்கு ஆழமாக வேரூன்றியே இருந்தது. ஜெனரல் முனீர் புதிய அதிகார மையமாக திகழ்வதன் மூலம், பாகிஸ்தானில் அதிகார சமநிலை முழுவதுமாக ராணுவத்தின் பக்கம் சாய்ந்துள்ளது. இதன் மூலம், பாகிஸ்தானை உண்மையில் இயக்குவது யார் என்பது மிகவும் தெளிவாகி உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
