பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிஃப், தமது நாடு கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு, பயிற்சி மற்றும் நிதியுதவி வழங்கி வந்ததை ஒப்புக் கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்கை நியூஸ் பத்திரிகையாளர் யால்தா ஹகிம் என்பவருக்கு அளித்த நேர்காணலில், இந்த உண்மையைத் தெரிவித்த அசிஃப், இந்தியா நீண்ட நாட்களாக சர்வதேச மன்றங்களில் முன்வைத்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து, தெற்காசிய பகுதியை நிலையற்றதாக மாற்றியிருக்கிறது என்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான ஒப்புதல், ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர், அதில் பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கியதை குறித்து யால்தா ஹகிம் கேள்வி எழுப்பியபோது, அசிஃப் தன்னிச்சையாக பதிலளித்தார்: “ஆம், கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகள குறிப்பாக பிரிட்டனுக்கும் இத்தகைய மோசமான பணிகளை நாங்கள் செய்து கொண்டு தான் இருந்தோம்.” இந்த வார்த்தைகள், சர்வதேச தூதரக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நேரடி வாக்குமூலம், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்த்தது என்ற இந்தியாவின் நீண்டகால குற்றச்சாட்டுகளை மேலும் உறுதி செய்கிறது. பல வருடங்களாக தெற்காசியாவை வாட்டியுள்ள பயங்கரவாதத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி இருப்பதை இந்த ஒப்புதல் மேலும் வலுப்படுத்துகிறது.
அதே நேர்காணலில், அசிஃப், இந்தியாவில் பல முக்கியமான தாக்குதல்களில் தொடர்புடைய லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற அமைப்புகள் தற்போது இல்லை என கூறியுள்ளார். மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் குறித்தும் எந்தத் தகவலும் தெரியாது என தன்னை சுத்தமாக காட்ட முயற்சித்தார்.
அவரது இந்த கூற்று, சர்வதேச சமுதாயத்தை தவறாக வழிநடத்தும் ஒரு திட்டமிட்ட முயற்சி மட்டுமல்ல, பயங்கரவாதத்தால் உயிரிழந்தோரின் நினைவையும் அவமதிப்பதாகும்.