பாகிஸ்தான் போட்ட 12 கையெழுத்து.. கையெழுத்தா போடுற, சரியான நேரத்தில் ஆப்பு வைத்த சீனா.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக் நெளியும் பாகிஸ்தான்.. அமெரிக்காவை நம்பி மோசம் போன நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான்.. சீனாவை பாகிஸ்தான் பகைத்ததால் இந்தியாவுக்கு குஷி

உலக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து வரும் சீனா, சமீபத்தில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அதன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு கடுமையான அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இரு துருவங்களுடனும் நட்பு…

pakistan2

உலக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து வரும் சீனா, சமீபத்தில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அதன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு கடுமையான அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இரு துருவங்களுடனும் நட்பு பாராட்ட முயலும் பாகிஸ்தானின் இந்த இரட்டை வேடம், அதன் பொருளாதார மற்றும் உள்நாட்டு பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

வரலாற்று ரீதியாகச் சீனாவுடன் சகோதரர் பாசம் என்ற நெருங்கிய உறவை கொண்டிருக்கும் பாகிஸ்தான், திடீரென அமெரிக்காவுடன் நெருக்கம் காட்ட தொடங்கியது. இதுவே தற்போதைய பதற்றத்தின் மையப்புள்ளி.

பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் அப்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் அமெரிக்காவுடன் சுமார் 498 லட்சம் கோடி ரூபாய் (6 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கனிம வளங்கள்) தொடர்பான 12 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

அமெரிக்காவின் யு.எஸ். ஸ்ட்ராடஜிக் மெட்டல்ஸ் என்ற நிறுவனம், பாகிஸ்தானில் உள்ள அரிதான கனிமங்களை வெட்டி எடுப்பதற்கும், பதப்படுத்துவதற்கும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய ஒப்புக் கொண்டது. அமெரிக்காவிடமிருந்து இந்த ஒப்பந்தத்தை பெற்றதால், ராணுவத் தளபதி முனீர் பாகிஸ்தானிய ஊடகங்களால் தேசிய ஹீரோவாகப் புகழப்பட்டார். ஆனால், இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை அவர்கள் உணரவில்லை.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு வல்லரசுகளும் தங்கள் ஆதிக்க போட்டியில் இந்த அரிதான கனிமங்களை ஒரு ‘மரண ஆயுதமாக பயன்படுத்துகின்றன. மின்னணு சாதனங்கள் (மொபைல்), ஏவுகணைகள், ரேடார்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கு இந்த கனிமங்கள் அத்தியாவசியமானவை.

உலக அரிதான கனிம சந்தையை சீனா ஏறக்குறைய தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சீனா ஒரு நாட்டின் மீது பொருளாதார தாக்குதல் தொடுக்க நினைத்தால், அதிகமாக உற்பத்தியை சந்தையில் வெளியிட்டு அதன் விலையை குறைக்கும். இதனால், புதிய உற்பத்தியாளர்கள் (இப்போது பாகிஸ்தான் போல) உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்ய முடியாமல், தங்களின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சீனாவிடமிருந்து அரிதான கனிமங்களுக்கான சார்பை குறைக்கவே அமெரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை குறிவைக்கிறது. இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவில் மட்டும் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுடன் பாகிஸ்தான் மேற்கொண்ட இந்த ஒப்பந்தம், அதன் பலுசிஸ்தான் மாகாணத்தை குறிவைக்கிறது. சுமார் 6 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அரிதான கனிமங்கள் இருப்பது இந்த பலுசிஸ்தான் மாகாணத்தில்தான் என கணக்கிடப்பட்டுள்ளது.

குவாதர் துறைமுகம் உள்ளிட்ட சீனாவின் ‘பாகிஸ்தான்-சீனா பொருளாதார வழித்தடம்’ (CPEC) திட்டத்தின் முக்கியப் பகுதியும் பலுசிஸ்தானில்தான் உள்ளது. எனவே, அமெரிக்க நிறுவனங்கள் இங்கு நுழைவது சீனாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது. பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்கனவே பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களும், கிளர்ச்சிகளும் அதிகம். இந்த சூழலில், அமெரிக்க நிறுவனங்கள் அங்கு செயல்பாடுகளை தொடங்குவது, மேலும் உள்நாட்டு கலவரங்களைத் தூண்ட வாய்ப்புள்ளது.

பாகிஸ்தானின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சீனா, சரியான நேரத்தில் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) எதிரான கடன் விகிதம் (Debt to GDP Ratio) 75%-ஆக உள்ளது (ஒரு நாடு 60% வரை தாங்கலாம்). அதாவது, பாகிஸ்தான் சம்பாதிக்கும் ஒவ்வொரு 100 ரூபாயிலும், 75 ரூபாயை கடனுக்காகச் செலவழிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த நிதி நெருக்கடியை பயன்படுத்திக்கொள்ளும் சீனா, பாகிஸ்தானுக்கு வழங்கிய கடனை விரைவாக திருப்பிச் செலுத்துமாறு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, பாகிஸ்தானுக்கான பல உதவிகளை நிறுத்தவும் சீனா முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவிடமிருந்து வரும் பொருளாதார அழுத்தத்தையும், அமெரிக்காவின் கனிம வள ஒப்பந்தத்தால் பலுசிஸ்தானில் அதிகரிக்கும் உள்நாட்டு பதற்றத்தையும் சமாளிப்பது பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீருக்கு ஒரு இமாலய சவாலாகும்.

இந்த மோதலில் பாகிஸ்தான் பிடிபடும்போது, அரசியல் ரீதியாக அதை திசை திருப்ப இந்தியாவுடன் எல்லையில் தேவையற்ற மோதல்களை அது உருவாக்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.