சீனாவில் உருவாக்கப்பட்ட இணைய ஃபயர்வாலை கொண்டு, கோடிக்கணக்கான குடிமக்களை அவர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணைய செயல்பாடுகள் மூலம் பாகிஸ்தான் அரசு உளவு பார்த்து வருவதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, தனிமனித சுதந்திரம் மற்றும் தனியுரிமை மீறல்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.
ஆம்னெஸ்டியின் அறிக்கையின்படி, பாகிஸ்தான் அதிகாரிகள் ஒரு பெரிய அளவிலான கண்காணிப்பு அமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். இது தொலைபேசி அழைப்புகளை இடைமறிப்பது, இணைய செயல்பாடுகளை கண்காணிப்பது உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. இந்த அமைப்பின் மையப்பகுதி, சீனாவால் உருவாக்கப்பட்ட ஃபயர்வாலாகும். இது அரசுக்கு இணைய உள்ளடக்கத்தை தணிக்கை செய்யவும், கண்காணிக்கவும், தேவைப்பட்டால் தடுக்கவும் அதிகாரம் அளிக்கிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த ‘உடமாகோ’ (Utamakco) நிறுவனத்தின் ‘லாஃபுல் இன்டர்செப்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ (Lawful Intercept Management System) என்ற மென்பொருள் மூலமாக இந்த கண்காணிப்பு நடைபெறுகிறது. இதற்கு நீதித்துறை அனுமதி தேவையில்லை. எந்த நேரத்திலும் 40 லட்சத்துக்கும் அதிகமான தொலைத்தொடர்பு பயனர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படலாம்.
இந்த உளவுப்பணி குற்றவாளிகள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மட்டும் குறிவைக்கவில்லை. மாறாக, சாதாரண குடிமக்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் எதிரிகள் ஆகியோரும் கண்காணிக்கப்படுகிறார்கள்.
‘பிஇசிஏ’ (PECA) சட்டத்தின் கீழ், 2016ஆம் ஆண்டு முதல் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. 2023-24 காலகட்டத்தில் மட்டும், 10,971 இணையதளங்கள் ‘மரியாதை, தேசியப் பாதுகாப்பு மற்றும் வெறுப்புணர்வை தூண்டுவது’ போன்ற காரணங்களுக்காக முடக்கப்பட்டன.
பாகிஸ்தானின் கண்காணிப்பு மற்றும் தணிக்கை தொழில்நுட்பங்களுக்கு ஜெர்மனி, சீனா, கனடா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் உதவியுள்ளன.
இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை பாகிஸ்தான் அரசு எந்தவித அதிகாரபூர்வ பதிலும் அளிக்கவில்லை. இந்த அறிக்கை, சட்டப் பாதுகாப்பு மற்றும் மேற்பார்வை பலவீனமாக இருக்கும் நாடுகளில், அரசுகள் கவிழாமல் இருக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து உலக அளவில் அதிகரித்து வரும் கவலைகளை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
