அண்டை நாடான பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை சட்டவிரோதமானது என்று ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. உள்ளூர் வணிகர்கள் பாகிஸ்தானை தவிர்த்து, மற்ற நாடுகள் வழியாக மாற்று வர்த்தக வழிகளை தேடுமாறு ஆப்கன் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் சமீப காலமாக எல்லை மோதல்கள் மற்றும் அரசியல் பதட்டங்கள் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் துணை பிரதமரும் பொருளாதார விவகார அமைச்சருமான முல்லா அப்துல் கனி பராதர், ஆப்கன் வர்த்தகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உடனடியாக பாகிஸ்தானை தவிர்த்து வேறு வழிகளில் வர்த்தகத்தை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் எந்தவொரு வர்த்தகரும் பாகிஸ்தான் வழியாக தொடர்ந்து பொருட்களை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்தால், வர்த்தக தடை அல்லது இழப்பு ஏற்பட்டால், ஆப்கன் அரசு எந்தவொரு ஆதரவையும் வழங்காது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஆப்கன் வர்த்தகர்களுடனான ஒரு கூட்டத்தில் பேசிய முல்லா பராதர், ஆப்கானிஸ்தான் வர்த்தகத்திற்காக பாகிஸ்தானை சார்ந்திருப்பதைக் குறைத்து, மற்ற நாடுகள் வழிகள் மூலம் உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த வர்த்தக தடையின் ஒரு பகுதியாக, தலிபான் நிர்வாகம் பாகிஸ்தானில் இருந்து அனைத்து மருந்து பொருட்களையும் இறக்குமதி செய்ய முழுமையாக தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் மருந்து பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்படும்.
இந்த அறிவிப்புகள், ஆப்கானிஸ்தான் தனது வர்த்தக பாதைகளை பல்வகைப்படுத்தவும், அண்டை நாடுகளுடனான எல்லை மற்றும் அரசியல் பதட்டங்கள் காரணமாக எதிர்கொள்ளும் நிலையற்ற தன்மையிலிருந்து விடுபடவும் முயல்வதை காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
