மனிதர்கள் அதிகம் பேர் இந்த பூமியில் வாழ்ந்து வந்தாலும் அவர்களுக்கு நிகராக இங்கே வாழும் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இந்த உலகில் அதிகம் உரிமை உள்ளது. ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் அல்லது பறவைகள் மனிதர்களை விட பேசும் விஷயத்தில் திறனற்று இருந்தாலும் அவர்களின் பல அதிசயமான குணங்கள் நிச்சயம் ஒருவித அறிவியல் வியப்பு தான்.
மேலும் மிருகங்கள் மற்றும் விலங்குகள் தொடர்பாக நிறைய ஆச்சரியமான விஷயங்கள் இருக்கும் அதே வேளையில், இன்னொரு பக்கம் நிறைய மர்மமான தகவல்களும் நிறைந்தே உள்ளது. அதிலும் சில பறவைகளிடம் இருக்கும் வினோத குணங்கள் பற்றி தெரிய வரும் போது நிச்சயம் ஒருவித மெய்சிலிர்ப்பே ஏற்படும்.
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் சுமார் 55 ஆண்டுகளாக அழிந்து போனதாக கருதப்பட்டு வந்த பறவை ஒன்று, உயிரியலாளரால் கண்டெடுக்கப்பட்ட விஷயம், உலக அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. New Britain Goshawk என்ற பறவையினம் ஒன்று, கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பாக அழிந்து போனதாக தெரியப்பட்டு வந்துள்ளது.
அப்படி இருக்கையில் தான் டாம் வெய்ரஸ் (Tom Vierus) என்ற கடல் உயிரியலாளர் இந்த கோஸாக் என்ற பறவையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடைசியாக இந்த பறவை தென்பட்டதாக அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன் பின்னர், சிலர் கோஸாக் என்ற இந்த பறவையை பார்த்ததாக தெரிவித்தாலும் அதன் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் கிடைக்கவில்லை.
அப்படி ஒரு சூழலில் தான் டாம் வெயர்ஸ் கடினமாக உழைத்து அழிந்து போன இந்த பறவை இனத்தை கண்டுபிடிக்க உதவி உள்ளார். கடற்கரை பகுதிகளில் தென்படாமல் இருந்த கோஸாக் பறவை, தற்போது பப்புவா நியூ கியூனியா பகுதியில் இருக்கும் கிராம புறங்களில் தற்போது தென்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகளவில் விலங்கு மற்றும் பறவை உயிரினங்களை காப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள WWF எனப்படும் அமைப்பு மூலம் இந்த பறவை இனம் பற்றி கூர்ந்து கவனித்து அதனை காப்பதற்கான வழிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இன்னொரு பக்கம், பறவைகள் மீது அதிக கவனம் எடுத்துக் கொள்ளும் பலருக்கும் இந்த செய்தி ஒரு உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
புவி வெப்பம் அடைதல் உள்ளிட்ட பல விஷயங்களால் பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வர அதில் பல பறவையினங்கள் மற்றும் மிருக இனங்கள் அழிந்து போனது கவலையை ஏற்படுத்தி வரும் சூழலில், இது போன்ற கண்டுபிடிப்புகளும் ஒரு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.