இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு மற்றும் அதிநவீன ஆயுத காட்சிகளை பார்த்த பாகிஸ்தான் தற்போது பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியா தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை உலகிற்கு பறைசாற்றிய விதம், பாகிஸ்தானின் ராணுவ வட்டாரங்களில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தருணத்தில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற சிந்தனை அமைப்பான ‘சிஎச்பிஎம்’ வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை, இந்திய-பாகிஸ்தான் வான்வழி போர் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த அறிக்கை பாகிஸ்தானின் நீண்ட கால போர் உத்திகளையும், அதன் பொய் பரப்புரைகளையும் உலக அரங்கில் அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த சுவிஸ் அறிக்கையின்படி, இந்தியாவின் முதன்மை இலக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிப்பதாக இருந்தது என்றும், அந்த இலக்கை இந்தியா 100\% வெற்றிகரமாக எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை பாகிஸ்தான் தனது அணுஆயுத பலத்தை காட்டி இந்தியாவை மிரட்டி வந்த நிலையில், தற்போது அந்த அணுஆயுத கேடயம் இந்தியாவின் ஆக்ரோஷமான பதிலடிக்கு முன்னால் பயனற்றதாகிவிட்டது என்பதை இந்த அறிக்கைஉறுதிப்படுத்துகிறது.
இந்திய விமானப்படையின் ‘ஆகாஷ் தீர்’ போன்ற ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்புகள், பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல் முயற்சிகளையும் முறியடித்துள்ளது. இதன் மூலம் வான்வெளியில் இந்தியாவின் மேலாதிக்கம் முற்றிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மலிர் கண்டோன்மென்ட் பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கான புதிய ஆதாரங்களும் தற்போது வெளியாகியுள்ளன. முன்னதாக கூகுள் மேப்ஸ் மூலம் காட்டப்பட்ட இடங்களை விட, ஆப்பிள் மேப்ஸின் அதிநவீன செயற்கைக்கோள் படங்கள் அங்குள்ள ராணுவ ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவால் தரைமட்டமாக்கப்பட்டதை தெளிவாக காட்டுகின்றன. ஒரு காலத்தில் வெண்மையாக தெரிந்த பாகிஸ்தானின் பாதுகாப்பு உள்கட்டமைப்புகள், இப்போது கருகிப்போய் கிடப்பதைக் காண முடிகிறது. இது பாகிஸ்தான் ராணுவம் தனது மக்களுக்குக் கூறி வந்த “சேதமே இல்லை” என்ற பொய்யை உடைத்து எறிந்துவிட்டது.
தகவல் போர்முறை என்று வரும்போது, பாகிஸ்தானின் ஐஎஸ்பிஆர் அமைப்பு உலக ஊடகங்களை வைத்து நடத்திய நாடகங்களை இந்த அறிக்கை தோலுரித்து காட்டுகிறது. போரின் ஆரம்ப கட்டத்தில் சில பொய் செய்திகளை பரப்பி உலக அளவில் ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்ற பாகிஸ்தான், நீண்ட கால அடிப்படையில் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தை வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் கூறியது எவ்வளவு பெரிய பொய் என்பது இப்போது உலகிற்கே தெரிந்துவிட்டது.
பாகிஸ்தான் ஒரு “நேட்டோ அல்லாத கூட்டாளி” என்ற தகுதியை வைத்துக்கொண்டு சில மேற்கத்திய ஊடகங்களில் செய்திகளை திருப்பினாலும், இப்போது உண்மையான தரவுகள் வெளிவரும்போது அவர்களால் தலைதூக்க முடியவில்லை.சீனா கூட இப்போது பாகிஸ்தானை எச்சரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அணைகள் அல்லது முக்கிய கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும், இந்தியாவிடம் அதற்கு பல மடங்கு ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்கும் திறன் உள்ளது என்றும் சீனா பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதார சரிவு மற்றும் ராணுவ பின்னடைவுகள் ஒருபுறம் இருக்க, இந்தியாவின் வலிமையான ராணுவ கட்டமைப்பு அவர்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. குறிப்பாக வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா அடைந்துள்ள அபார வளர்ச்சி, பாகிஸ்தானின் பாதுகாப்பு சமநிலையை முற்றிலுமாக குலைத்துள்ளது.
இறுதியாக, இந்திய ராணுவம் தனது செயல்பாடுகளில் காட்டும் நிதானமும் அதே சமயம் துல்லியமான தாக்குதல் திறனும் ஒரு புதிய ‘டாக்ட்ரின்’ மாற்றத்தை காட்டுகிறது. இனி பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பயன்படுத்தினால் இந்தியா தனது எல்லையில் மட்டும் பதிலடி கொடுக்காது, மாறாக பாகிஸ்தானின் ஆழமான பகுதிகளுக்குள் புகுந்து அவர்களின் ராணுவ மையங்களை தாக்கும் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது.
குடியரசு தின விழா அணிவகுப்பு என்பது வெறும் கண்காட்சி மட்டுமல்ல, அது இந்தியாவின் இறையாண்மையை காக்க துடிக்கும் வீரத்தின் அடையாளம். பாகிஸ்தான் இனி தனது பொய் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, இந்தியாவின் வளர்ந்து வரும் வலிமையை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
