இந்த உலகத்தில் நாம் அன்றாடம் வெளியே சுற்றித் தெரியும் போதே ஒரு பெண் ஆணையும், ஒரு ஆண் பெண்ணையும் பார்க்க நேரிடும். ஆனால், ஒரு நபர் 82 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த போதிலும் தனது தாய் உட்பட ஒரு பெண்ணை கூட நேரில் பார்க்காமலே உயிரிழந்து போயுள்ளார்.
சில நபர்கள் தங்களுக்கு பிடித்த அல்லது பிடிக்காத விஷயங்களை கூட வாழ்நாளில் பார்க்காமல் உயிரிழந்து விடுவார்கள். ஆனால், ஒரு ஆணால் ஒரு பெண்ணை பார்த்ததில்லை என்றால் எப்படி இருக்க முடியும். அதற்கு ஆம் என சொல்லும் நபரின் வாழ்க்கை பற்றியும், அவர் யார் என்பது பற்றியும் தற்போது பார்க்கலாம்.
Mihailo Tolotos என்ற நபர் தான் பெண்ணை வாழ்நாளில் பார்க்காமல், ஒன்றல்ல, இரண்டல்ல 82 ஆண்டுகள் வாழ்ந்து உயிரிழந்தவர். இவர் கடந்த 1856 ஆம் ஆண்டு இந்த மண்ணில் பிறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஒரு பெண்ணை கூட பார்த்ததில்லை என்றால் உடனடியாக அவரது தாயை பார்த்திருக்கலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
ஆனால், இந்த மிஹாலியோ என்ற நபர் பிறந்ததும் அவரது தாயார் மறைந்து போனதாக தகவல்கள் கூறுகின்றது. இதனால், பிறந்ததும் அனாதையாக மாறிய மிஹாலியோ குழந்தையாக இருந்த போதே கிரீஸ் நாட்டின் மவுண்ட் அதோஸ் என்ற பகுதியில் இருக்கும் துறவிகளின் மடாலயம் ஒன்றின் மூலம் தத்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது.
மேலும், மிஹாலியோவும் அங்குள்ள துறவிகளால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் நிறைய மடாலயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், பல நூற்றாண்டுகளாக இங்கே சில கண்டிப்பான விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக அந்த மடாலயங்களுக்குள் பெண்கள் நுழையக் கூடாது என்ற விதி இருந்துள்ளது. மேலும் அந்த மலை பகுதியில் பெண்கள் ஏற முயற்சித்தாலே தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிஹாலியோ நினைத்திருந்தால் அந்த மடாலயத்தை விட்டு வெளியேறி வெளி உலகம் சென்று பெண்கள் நிறைய பேரை பார்த்து, பேசி, பழகி இருக்கலாம். ஆனால், அதனை விரும்பாத அவர் தனது எம்பதுகளிலும் கூட மடத்தை விட்டு பிரியாமல் வாழ்ந்து வந்துள்ளார். நிலைமை இப்படி இருக்க, சக பாலினமான பெண்கள் பற்றி புத்தகங்களில் படித்தும், தெரிந்தவர்கள் சொல்லியும் தான் கேள்விப்பட்டுள்ளார் மிஹாலியோ.
தனது 82 வது வயதில் கடந்த 1938 ஆம் ஆண்டு உயிரிழந்த போதும் அங்கிருந்த சக துறவிகளால் பெண்களை தன் வாழ்நாளில் பார்க்காமலே மறைந்த நபர் என்று தான் குறிப்பிடப்பட்டார் மிஹாலியோ. உலகிலேயே ஒரு பெண்ணை கூட பார்க்காமல், அதுவும் 82 ஆண்டுகள் வாழ்ந்த ஒரே ஆண் என்ற பெயரும் மிஹாலியோ என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அவர் பெண்களை மட்டுமில்லாமல், மிதிவண்டி, கார், விமானம் உள்ளிட்டவற்றை கூட பார்க்காமல், வெளி உலகம் எப்படி இருக்கும் என்பதையே பார்க்காமல் தான் இறந்து போயுள்ளார். இன்று சிங்கிள் என்ற பெயரில் பல ஆண்கள் பெண்களை ஏறெடுத்து பார்க்க மாட்டோம் என மார்தட்டி கூறி வரும் சூழலில், அப்படி ஒருவர் நிஜத்தில் இருந்த தகவல் ஒரு நிமிடம் அவர்களையும் அதிர்ச்சி அடைய தான் வைத்துள்ளது.