இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும் சூழலில், ஒரு நபர் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஆன்லைனில் வராமல் போனாலே அவருக்கு என்ன ஆனது என உடனடியாக விசாரிக்கத் தொடங்கி விடுவார்கள். இதனால், இன்று நண்பர்கள் இருந்தாலும், இல்லை என்றாலும் ஒரு நபர் தனியாக இருப்பதும், அவரை பற்றிய விஷயங்கள் தெரியாமல் இருப்பதுமே அரிதான நிகழ்வாக மாறி விட்டது.
அப்படி ஒரு சூழலில், கடந்த 2006 ஆம் ஆண்டு பெண் ஒருவர் தனியாக வாழ்ந்து வந்த வீட்டில் 3 ஆண்டுகளாக டிவி தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருந்ததுடன் கதவை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ஒரு நிமிடம் திடுக்கிட வைத்துள்ளது. Joyce Vincent என்ற பெண்மணி, கடந்த 1965 ஆம் ஆண்டு Hammersmith என்னும் பகுதியில் பிறந்துள்ளார்.
இவருக்கு 11 வயதாகும் போது தாய் மறைந்து போக, பின்னர் அக்காவின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இதன் பின்னர் பள்ளிப் படிப்பை முடித்து தனியார் நிறுவனம் ஒன்றிலும் ஜாய்ஸ் வின்சென்ட் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, எப்போதும் நிறைய நண்பர்களுடன் காணப்படும் ஜாய்ஸ், வெளியே ஊர் சுற்றுவது என்றும் இருந்துள்ளார்.
இப்படி இருந்த ஜாய்ஸ் வாழ்க்கை, திடீரென தலைகீழாக மாறிப் போனது. தனது வேலையில் இருந்தும் விலகிய ஜாய்ஸ் வின்சென்ட், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தனது உறவை முறித்துக் கொண்டுள்ளார். அதன் பின்னர் தனியாக வாழ்ந்து வந்த ஜாய்ஸ், 2003 ஆம் ஆண்டு sky city என்ற இடத்தில் தனியாக வாழ தொடங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில், 2003 ஆம் ஆண்டு ரத்த வாந்தி எடுத்த ஜாய்ஸ் வின்சென்ட், மருத்துவமனையை அணுகிய போது அவருக்கு அல்சர் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர், யார் பார்வையிலும் படாமல் இருந்த ஜாய்ஸ் குறித்து சுமார் 3 ஆண்டுகள் கழித்து தான் தெரிய வந்துள்ளது. அவர் பல மாதங்களாக வாடகை தராததால் 2006 ஆம் ஆண்டு அவரின் பிளாட்டிற்கு சிலர் சென்றுள்ளனர்.
நீண்ட நேரம் அழைத்தும் பலன் கிடைக்காமல் போக, 2003 ஆம் ஆண்டு வந்த செய்தித்தாள்களை கூட எடுக்காமல் ஜாய்ஸ் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்ற அனைவரையும் ஒரு நிமிடம் உறைய வைக்கும் காட்சி தான் அங்கே காண கிடைத்துள்ளது.
அவரது வீட்டில் டிவி ஓடி கொண்டிருக்க, சோபாவில் எலும்புக்கூடு ஒன்று இருந்துள்ளது. இது பற்றி பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட, அவர்கள் வந்து ஜாய்ஸ் வின்சென்ட் உடலை மீட்டு விசாரணையை மேற்கொண்டனர். அவரது இறப்பிற்கான காரணம் கண்டுபிடிக்க முடியாமல் போக ஆஸ்துமா மூலம் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதி உள்ளனர்.
அதே போல, 2003 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததாக தெரியும் சூழலில், 3 ஆண்டுகள் டிவி நிற்காமல் ஓடியுள்ளது. மேலும், அவரது மின்சார கட்டணம் ஒவ்வொரு மாதமும் ஆட்டோமெட்டிக்காக அடைத்து கொள்ளும் என்பதால் சந்தேகம் எழவில்லை. அவர் வாழ்ந்த பிளாட் பகுதி எப்போதும் அதிக இரைச்சலுடன் இருந்ததால் ஜாய்ஸின் டிவியின் சத்தத்தையும் யாரும் கவனிக்கவில்லை.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உறவை துண்டித்துக் கொண்ட பெண் ஒருவர், 3 ஆண்டுகளாக சோபாவில் இறந்தே இருந்த போதிலும் அதனை யாருமே கண்டு கொள்ளவில்லை என்ற விஷயம் நிச்சயம் ஒரு பயத்தை தான் அனைவருக்கும் கொடுக்கிறது.