கேப்டனா சச்சினுக்கு நடந்ததே தான்.. தோனி, கோலி காத்த கவுரவத்தை இழந்த ரோஹித்..

Published:

கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பையை வென்ற போது கிரிக்கெட் அரங்கில் தலைச்சிறந்த கேப்டன் என்ற பெயரையும் எடுத்திருந்தார் ரோஹித் ஷர்மா. கோப்பையை வென்று கொடுத்தது மட்டும் அவரை ஒரு சிறந்த தலைவர் என்பதை உணர வைக்காமல், நல்ல பேட்ஸ்மேனாக ஜொலித்த ரோஹித் தொடர்ச்சியாக 3 ஐசிசி தொடர்களில் இறுதி போட்டிக்கும் இந்திய அணியை கூட்டி கொண்டு சென்றார்.

அதில் இரண்டு தொடரில் கோப்பையை இந்திய அணியால் வெல்ல முடியாமல் போக, டி20 உலக கோப்பையையும் அவர்கள் சொந்தமாக்கி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்த ரோஹித் ஷர்மா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரிலும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இந்திய அணி ஆடும் ஒரே ஒரு நாள் தொடர் என்பதால் அவர்களுக்கு முக்கியமான ஒரு தொடராகவும் அமைந்திருந்தது. இளம் வீரர்கள் நிறைய பேர் இருப்பதால் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் வாய்ப்பாகவும் அமைந்திருந்தது.

இந்த தொடரின் 3 போட்டிகளிலும் கேப்டனாக அசத்தலாக செயல்பட்ட ரோஹித் ஷர்மா, பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடி அரைச் சதமடித்திருந்தார். ஆனால், பந்து வீச்சில் கலக்கிய இந்திய வீரர்கள், பேட்டிங்கில் கடுமையாக சொதப்பி இருந்தனர். கோலி உள்ளிட்ட யாருமே ரன் குவிப்பில் ஈடுபடாமல் போக, இரண்டு போட்டிகளில் தோற்று தொடரை இழக்கவும் நேரிட்டது.

ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா தனது முழு பங்களிப்பையும் அளித்திருந்தார். ஆனாலும் ஒரு அணியாக சிறப்பாக செயல்படாமல் போக, இந்திய அணி 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் தொடரை இலங்கை அணிக்கு எதிராக இழந்திருந்தது. இத்தனை ஆண்டுகளாக இந்தியா வசம் இருந்த பெருமை, பலம் வாய்ந்த அவர்களுக்கு எதிராக இலங்கை அணி தட்டித் தூக்கி சாதனை புரிந்திருந்தது.

அப்படி ஒரு சூழலில், ஒரு கேப்டனாக ரோஹித் ஷர்மா தவற விட்ட பெருமையை பற்றி தற்போது பார்க்கலாம். டிராவிட், கங்குலி, தோனி, கோலி என ரோஹித்துக்கு முன் இந்திய அணியை வழிநடத்திய யாருமே இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை இழந்ததில்லை. ஆனால், அதற்கு முன்பாக, 1993 ஆம் ஆண்டு முகமது அசாருதீன் வழிநடத்தி வந்த இந்திய அணி, இலங்கைக்கு எதிராக ஒரு நாள் தொடரை இழந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, 1997 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணியும் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் தொடர் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டிருந்தது. இதற்கடுத்து 3 வது இந்திய கேப்டனாக இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை ரோஹித் ஷர்மா இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...