பொதுவாக இரட்டையர்களாக பிறப்பவர்கள் ஒரே மாதிரி அனைத்து குணத்தில் ஒத்திருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. உதாரணத்திற்கு குழந்தைகளாக இருக்கும் போது ஒரே நேரத்தில் தூங்குவது, ஒரே மாதிரி குணங்கள் படைத்திருப்பது, ஒரே நேரத்தில் பசி வருவது என பல விஷயங்கள் ஒத்து போவதே பெரிய வியப்பாக இருக்கும்.
அப்படி ஒரு சூழலில் தான், இரட்டையர்களாக பிறந்ததும் பிரிந்து வெவ்வேறு இடங்களில் வளர்க்கப்பட்ட சூழலில், 39 ஆண்டுகள் கழித்து அவர்கள் சந்தித்த போது தெரிய வந்த விஷயம், பெரிய அளவில் அவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ஜிம் லீவிஸ் (Jim Lewis) மற்றும் ஜிம் ஸ்ப்ரிங்கர் (Jim Springer) ஆகிய இருவர் கடந்த 1940ல் 15 வயதான பெண்ணுக்கு மகன்களாக பிறந்துள்ளனர். ஆனால், அவர்கள் பிறந்த சில வாரங்களிலேயே இருவரும் பிரிந்ததுடன் வெவ்வேறு வீடுகளிலும் வளர்க்கப்பட்டு வந்துள்ளனர். தாங்கள் இரட்டையர்கள் என்ற விஷயம் இரண்டு பேருக்குமே தெரியாமல் இருந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் பின்னர் தான் சில வியப்பான விஷயங்கள் இரண்டு பேருக்கும் நடுவே நடக்க தொடங்கி உள்ளது. இரண்டு பேரின் வளர்ப்பு பெற்றோர்களும் அவர்களுக்கு ஜேம்ஸ் என்ற பெயரை வைத்து ஜிம் என்றும் அழைத்து வந்துள்ளனர். இப்படி ஆரம்பமே சுமார் 40 மைல் தூரத்தில் வாழ்ந்த இரட்டை சகோதரர்களுக்கு நடுவே ஒற்றுமையாக இருக்க, இதன் பின்னர் பல விஷயங்கள் அப்படி தான் அமைந்துள்ளது.
இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் கணிதத்தில் சிறந்து விளங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் எழுத்துப்பிழை இருந்து வந்துள்ளது. மேலும் ஜிம் சகோதரர்கள் ஒரே பணியில் இருந்து தான் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.
இருவரும் டாய் என பெயர் சூட்டி ஒரு நாயை அன்பாக வளர்த்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் முதல் திருமணம் செய்த பெண்ணின் பெயரும் லிண்டா தான். இருவருக்குமே விவகார்த்தாகி உள்ள நிலையில், இரண்டாவது திருமணத்தையும் அவர்கள் செய்து கொண்டுள்ளனர். அப்படி இரண்டாவதாக அவர்கள் திருமணம் செய்த பெண்ணின் பெயரும் பெட்டி (Betty) என ஒன்றாகவே இருந்துள்ளது.
இது தவிர புகைப்பிடித்தல், மது பழக்கம், நகம் கடித்தல் என பல ஒற்றுமையான பழக்கங்கள் இருந்துள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், 18 வயதில் இருவருக்குமே டென்சன் பெயரில் தலைவலி ஒன்றும் வர தொடங்கி உள்ளது. அத்துடன் இரண்டு பேரும் தங்களின் மகனுக்கு ஏறக்குறைய ஒரே பெயர்களை வைத்துள்ளனர் (James Alan மற்றும் James Allan).
இந்த நிலையில் தான், தங்களின் 39 வது வயதில் கடந்த 1979 ஆம் ஆண்டு அவர்கள் சந்தித்துள்ளனர். இப்படி ஜிம் சகோதரர்கள் பிரிந்திருந்த போதிலும் ஒரே மாதிரி செய்த விஷயங்கள், மின்னெசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து, இது தொடர்பாக அவர்கள் பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.
அவர்களே இப்படி இரட்டையர்களின் ஒற்றுமை அறிந்து ஒருநிமிடம் மிரண்டு போக, எப்படி மனைவிகளின் பெயர் வரைக்கும் ஒன்றாக இருக்க முடியும் என்றும் குழம்பி போயுள்ளனர். இப்படி நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் சில விஷயங்களில் வித்தியாசங்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.