புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் 8வது மாநாட்டின் கானா நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் ஜான் அப்துலாய் ஜினாபூர் ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார். இந்த கருத்து உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது கூற்றின்படி இந்தியாவிற்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்ய தனது கானா நாடு விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலாக இந்தியாவிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு பெற்று கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்காவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில் கானாவும் ஒன்றாகும். அந்நாடு கணிசமான எரிசக்தி வளங்களை கொண்டுள்ளது. கானாவில் சுமார் 1.1 பில்லியன் பேரல்கள் எண்ணெய் கையிருப்பு உள்ளது. மேலும், சுமார் 2.1 டிரில்லியன் கன அடி எரிவாயு கையிருப்பும் அந்நாட்டிடம் உள்ளது. இந்த வளமான அடித்தளத்துடன், கானா தனது தூய்மையான எரிசக்தி இலக்குகளை அடைவதில் தீவிரமாக உள்ளது.
“கானா 2030-ஆம் ஆண்டிற்குள் தனது மொத்த எரிசக்தி தேவைகளில் 10% புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. இருதரப்பு பண்டக பரிமாற்ற ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவை போன்ற நாடுகளின் ஆதரவுடன் இந்த இலக்கை எங்களால் அடைய முடியும். என கானா எரிசக்தித் துறை அமைச்சர் ஜான் அப்துலாய் ஜினாபூர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய அமைச்சர் ஜான்பூர், தூய்மையான ஆற்றல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் பயனடைய இந்தியாவுடனான ஒத்துழைப்பை ஆப்பிரிக்கா வலுப்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்:
உலகின் சூரிய சக்தி திறனில் 60% ஆப்பிரிக்கா கொண்டுள்ள நிலையில், இந்த துறையில் இந்தியா அளிக்கும் ஆதரவு முக்கியமானது. கானாவில் நிறுவப்பட்டுள்ள இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே மின்மாற்றிகள் (Transformers) மற்றும் மீட்டர்களை தயாரித்து வருகின்றன. இது உள்ளூரில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, கானாவின் பொருளாதாரத்திற்கு மதிப்பு கூட்டுகிறது.
இந்தியாவுடனான ஆழமான கூட்டாண்மை கானாவின் பசுமை எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்த உதவும் என்று அமைச்சர் ஜினாபூர் நம்புகிறார். இந்த நெருங்கிய ஒத்துழைப்பு இரு நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் தேவை, ரஷ்யாவிடம் இருந்து வாங்கினால் அமெரிக்கா கோபம் கொள்கிறது, கூடுதல் வரி விதிக்கிறது. எனவே ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்து, கானாவிடம் வாங்கினால் பணம் கொடுப்பதற்கு பதிலாக அந்நாட்டிற்கு எரிசக்தி துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தி கொடுத்தால் போதுமானது.
எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தை கையாளும் இந்ச் சூழலில், இந்தியா மற்றும் கானா இடையேயான இந்த பரிமாற்ற அணுகுமுறை, இரு நாடுகளின் ஒத்துழைப்பிற்கு ஒரு முக்கியமான மாதிரியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
