பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவரான ஃபைஸ் ஹமீதுக்கு ராணுவ நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில், அவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக சாட்சியமளிப்பார் என பாகிஸ்தான் அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் முன்னாள் தலைவரும் செனட்டருமான ஃபைசல் வாவ்தா, ஃபைஸ் ஹமீது, இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது நடந்த முறைகேடுகள் குறித்து ஆதாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக கூறியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலை, ஏற்கனவே பல வழக்குகளில் சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபைஸ் ஹமீதின் அரசியல் பிரவேசமும் பதவி விலகலும் மிகவும் சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில், அப்போதைய டிஜி ஐஎஸ்ஐ பதவியில் இருந்து மற்றொரு அதிகாரியை நீக்கிவிட்டு, ஃபைஸ் ஹமீதை அந்த பதவியில் நியமித்தது பெரும் விவாதத்தை கிளப்பியது. எனினும், 2022-ல் இம்ரான் கான் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நீக்கப்பட்ட சிறிது காலத்திலேயே, ஃபைஸ் ஹமீது தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு முன்கூட்டியே ஓய்வு பெற்றார். அதன் பிறகு 2024-ல் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது உச்ச நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வணிக வளாகத்தில் சோதனை நடத்தி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு எதிராக ராணுவ நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
கடந்த வியாழக்கிழமை, பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் ஃபைஸ் ஹமீதுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை உறுதிசெய்து அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது, தனிநபர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். எனினும், ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், தீர்ப்பு வழங்கும் நேரத்தில் ஃபைஸ் ஹமீதின் பாதுகாப்பு அணி அல்லது அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், வழக்கறிஞர்கள் அமையாத நிலையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும் அவரது வழக்கறிஞர் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மறுபுறம், 2022-ல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார். தன்னை வீழ்த்துவதிலும், தனது பிடிஐ கட்சியை இலக்கு வைப்பதிலும் பாகிஸ்தான் ராணுவம் சூழ்ச்சி செய்வதாக அவர் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வருகிறார். ஃபைஸ் ஹமீதின் வழக்கு இம்ரான் கானை இலக்கு வைப்பதற்கான ஒரு முயற்சி என்று பிடிஐ கட்சியினர் கருதுகின்றனர்.
ஃபைஸ் ஹமீதின் சாட்சியம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், இம்ரான் கானின் எதிர்கால அரசியல் நிலை மற்றும் சிறைவாசம் ஆகியவை பாகிஸ்தான் அரசியலில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
