அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், புதிய H1B விசாக்களுக்கான கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தி, $10,000-ல் இருந்து $100,000 ஆக நிர்ணயித்திருப்பதற்கு எதிராக, அமெரிக்காவில் உள்ள சக்திவாய்ந்த வர்த்தக மற்றும் தொழில் அமைப்புகள் இணைந்து சட்ட போராட்டத்தை தொடங்கியுள்ளன. “வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து பணியமர்த்தும் நிறுவனங்களைத் தடுக்கவே” இந்த அதிரடி முடிவை டிரம்ப் நிர்வாகம் எடுத்ததாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த வணிக ஆதரவு அமைப்புகளில் ஒன்றான அமெரிக்க வர்த்தக சபை , இந்த விசா கட்டண உயர்வுக்கு எதிராக வாஷிங்டன் டி.சி. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த விசா கட்டண உயர்வு சட்டவிரோதமானது என்பதே வர்த்தக சபையின் முக்கிய வாதமாகும். விசா கட்டணங்களை நிர்ணயிக்கும் அல்லது உயர்த்துவதற்கான சட்ட அதிகாரம் அமெரிக்க அதிபருக்கோ அல்லது வெள்ளை மாளிகைக்கோ இல்லை; அமெரிக்க காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
புதிய $100,000 கட்டணம், அமெரிக்காவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதிச்சுமையைஏற்படுத்தும். இதனால், அவர்கள் உலகளாவிய திறமையாளர்களை பெறுவது சாத்தியமற்றதாகிவிடும் என்றும், இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வர்த்தக சபை கூறியுள்ளது.
வர்த்தக சபை மட்டுமல்லாமல், செப்டம்பர் 23-ஆம் தேதி கலிஃபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில், சுகாதார பராமரிப்பு, கல்வி, வேளாண்மை, விண்வெளி மற்றும் ஆட்டோமொபைல் துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட ஒன்பது புகார்தாரர்கள் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைக்கு எதிராக பலதரப்பட்ட வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதுவரை H1B விசாக்களுக்கு $2,000 முதல் $5,000 வரை கட்டணம் விதிக்கப்பட்ட நிலையில், அதை $100,000 ஆக உயர்த்தும் அதிபரின் அறிவிப்பை எதிர்த்து, ஏழு சட்ட நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இந்த வழக்கை நடத்தியுள்ளன. இதுவரையிலான சட்ட போராட்டங்களில் இது மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது.
அதிபர் டிரம்ப் விதித்துள்ள கட்டண உயர்வு சட்டப்பூர்வமானதா இல்லையா என்பதை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள வடக்கு கலிஃபோர்னியா மாவட்ட நீதிமன்றம் இனி விசாரிக்கும். அமெரிக்காவில் மாவட்ட நீதிமன்றங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் என மூன்று அடுக்கு நீதிமன்றங்கள் உள்ளன. இதுபோன்ற வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் தொடங்குகின்றன.
விசா கட்டணங்களை மாற்றுவது காங்கிரஸின் அதிகார வரம்புக்குட்பட்டது; அதிபர் தன் அதிகாரத்தை மீறிவிட்டார் என்பதே அனைத்து வழக்குகளின் மையக் கருத்தாக உள்ளது. நீதிமன்றம் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை உறுதி செய்தால், புகார்தாரர்கள் உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால், உத்தரவு ரத்து செய்யப்பட்டால், அது கலிஃபோர்னியா மாநிலத்துக்குள் மட்டுமே செல்லுபடியாகும் வாய்ப்புள்ளது. (
இந்த சட்டப் போராட்டங்களின் விளைவுகள், அமெரிக்க குடியேற்றம் மற்றும் விசா கொள்கைகள் எதிர்காலத்தில் எவ்வாறு கையாளப்படும் என்பதை தீர்மானிக்கும் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய கட்டண உயர்வால் இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களே அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
