வடக்கு மற்றும் தெற்கு கரோலினாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு கரோலினாவில் உள்ள தீ பாதுகாப்பு அலுவலகத்தின் தகவலின்படி, 4,200 ஏக்கர் நிலத்தை காட்டுத்தீ எரித்துள்ளன என்றும், தீ அணைப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், அருகில் உள்ள ஹோறி, ஸ்பார்டன்பர்க், யூனியன், ஒகோனி, மற்றும் பிக்கென்ஸ் மாகாணங்களில் இருந்து மீட்புப்பணிகளுக்காக உதவிகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை மைர்டில் பீச்சிற்கு மேற்கே அமைந்துள்ள பகுதியில் இருந்துதான் தீ வேகமாக பரவி வருவதாகவும், சுமார் அரை டஜன் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு கரோலினா ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர் இந்த காட்டுத்தீ குறித்து கூறியபோது, தீ அணைப்பு பணிகளுக்காக அவசர நிலையை அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
வட கரோலினாவில், ப்ளூ ரிட்ஜ் மலைப்பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ, தெற்கு கரோலினா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சலுடா மற்றும் ட்ரையான் வரை அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த காட்டுத்தீ, இதுவரை 400 ஏக்கர் நிலத்தை எரித்துவிட்டது என்றும், இன்னும் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய நிலவரப்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயமல்ல, ஆனால் விருப்பமிருந்தால் வெளியேறலாம்,” என தீயணைப்பு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.