அமெரிக்க-சீனா வர்த்தக போர் தற்போது மிக மோசமான முறையில் விபரீதம் ஆகி வரும் நிலையில், இதன் அடுத்தகட்டமாக சீனா தனது விமான சேவைகளுக்கு போயிங் ஜெட்டுகளின் அனைத்து எதிர்கால ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்குமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் சீன இறக்குமதிகளில் 145% வரி விதிக்க முடிவு செய்ததற்கான பதிலடியாக தெரிகிறது.
அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு காரணமாக போயிங் விமானங்களை சீனா தற்போது வாங்கினால் இரண்டு மடங்கு விலை அதிகமாகிவிடும். எனவே சீனா, போயிங் விமானங்களை பெறுவதை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த முடிவு போயிங் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது, ஏனெனில் சீனா போயிங் நிறுவனத்தின் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாக உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் சீனா உலகளாவிய விமான தேவையின் 20% ஐ போயிங் நிறுவனத்திடம் இருந்து தான் வாங்க திட்டமிட்டு இருந்தது. இனி போயிங் விமானங்களை சீனா வாங்காவிட்டால் அது அந்நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறக்கூடும்.
அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளின் இந்த வர்த்தக போர், விமானபுறம் மற்றும் தொழில்நுட்பம் முதல் பொது பொருட்கள் வரை முக்கியத் துறைகளை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. இது உலகளாவிய சப்ளை மற்றும் வணிக நம்பகத் திறனுக்கும் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
