பாகிஸ்தானின் பாதுகாப்பு படை வீரர்கள் ஏழு பேரை தங்கள் பிடியில் வைத்திருப்பதாக கூறி, பிரிவினைவாத ஆயுத குழுவான பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் பாகிஸ்தான் அரசுக்கு ஏழு நாட்கள் காலக்கெடு விதித்துள்ளது. இந்த ஏழு நாட்களுக்குள் பாகிஸ்தான் சிறையில் உள்ள பலுசிஸ்தான் கைதிகளை விடுவித்து, பிணை கைதிகளைப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பிடிபட்டுள்ள வீரர்கள் மரணதண்டனையை சந்திக்க நேரிடும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. ஹக்கால் என்ற தங்களது ஊடக பிரிவு மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, தற்போதைய நிலையில் காலக்கெடு முடிவடைய இன்னும் ஆறு நாட்களே உள்ளதாக கூறி ஒரு வீடியோ செய்தியையும் பகிர்ந்துள்ளது.
‘ஆபரேஷன் ஹீரோஃப்’ என்ற தங்களது நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் போது, பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த மொத்தம் 17 பேரை சிறைபிடித்ததாக இந்த அமைப்பு உரிமை கோரியுள்ளது. இதில் 10 பேர் உள்ளூர் காவல் துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பலுசிஸ்தான் இனத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதால், அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பலுசிஸ்தான் மக்களின் நலன் மற்றும் உள்ளூர் நிலவரங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு, எஞ்சியுள்ள 7 பேர் பாகிஸ்தான் ராணுவத்தின் வழக்கமான பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை தொடர்ந்து காவலில் வைத்துள்ளதாக கூறியுள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட ஏழு வீரர்களும் தங்களது ‘பலுச் தேசிய நீதிமன்றத்தில்’ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பி.எல்.ஏ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின் போது, அந்த வீரர்கள் மீது அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள், பலுசிஸ்தான் மக்கள் காணாமல் போவதற்கு உடந்தையாக இருந்தது மற்றும் பலுச் இனப்படுகொலையில் பங்கேற்றது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. விசாரணையில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது. போர் சூழலிலும் சில நெறிமுறைகள் மற்றும் பரஸ்பர பொறுப்புகள் இருப்பதாக நம்புவதாகவும், அதை நிலைநாட்டவே இந்த வாய்ப்பை வழங்குவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
பாகிஸ்தான் அரசு தனது வீரர்களின் உயிரை பாதுகாக்க விரும்பினால், உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கைதிகள் பரிமாற்றத்திற்கு முன்வர வேண்டும் என்று அந்த அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது. இதற்கு முன்னரும் பலமுறை இதுபோன்ற கைதிகள் பரிமாற்ற திட்டங்களை தாங்கள் முன்மொழிந்ததாகவும், ஆனால் பாகிஸ்தான் அரசு தனது வீரர்களின் உயிரை பொருட்படுத்தாமல் மௌனம் காத்து அலட்சியம் காட்டியதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இப்போது முடிவு எடுக்க வேண்டியது பாகிஸ்தான் அரசின் கையில் தான் உள்ளது என்றும், அவர்கள் அமைதியாக இருந்தால் அது வீரர்களின் மரணத்திற்கு அவர்களே பொறுப்பேற்பது போன்றதாகும் என்றும் பி.எல்.ஏ அமைப்பு தனது அறிக்கையில் கடுமையாக தெரிவித்துள்ளது.
இந்த செய்தி மற்றும் வீடியோ குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் பாகிஸ்தான் ராணுவம் அல்லது அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை. பாகிஸ்தானை பொறுத்தவரை பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாகவே கருதுகிறது மற்றும் அந்த நாட்டில் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும் பி.எல்.ஏ அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பலுசிஸ்தான் பகுதியில் தங்களது இருப்பு என்பது ஒரு ஆக்கிரமிப்பு என்ற பி.எல்.ஏ-வின் வாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த ஏழு நாள் காலக்கெடு உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு இந்த பிரச்சினையை எவ்வாறு கையாளப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. பிரிவினைவாதிகளின் இந்த மிரட்டலுக்கு பணிந்து கைதிகளை விடுவிக்குமா அல்லது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமா என்பது வரும் நாட்களில் தெரியவரும். இந்த விவகாரம் பலுசிஸ்தான் பகுதியில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றமான சூழலை மேலும் அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

