பாதுகாப்பு மற்றும் சர்வதேச அரசியல் விவகாரங்களில் ஆழமான பார்வையை வழங்கும் நிபுணர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் தற்போதைய அவல நிலையை தோலுரித்து காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், தனது சொந்த நாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கே பயந்து, குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்கு பின்னால் நின்று கொண்டு உரையாற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒரு நாட்டின் ராணுவ தளபதி தனது சொந்தப் படை வீரர்கள் மீது நம்பிக்கை இழந்து, ஆர்மர் பிளேட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் வலம் வருவது அந்த நாட்டின் ராணுவக்கட்டமைப்பின் வீழ்ச்சியையே காட்டுகிறது என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்திற்குள் நிலவும் இந்த அச்சம் அதன் உச்சகட்டத்தை எட்டியிருப்பதை, ஆசிம் முனீர் தனது மகளின் திருமணத்தை மிகவும் ரகசியமாக நடத்திய விதத்திலிருந்து அறிய முடிகிறது. பொதுவாக ஒரு தளபதியின் வீட்டு திருமணம் என்பது பெரிய கொண்டாட்டமாக இருக்கும் சூழலில், எந்தவொரு புகைப்படமோ அல்லது தகவலோ கசியாமல் அவர் அஞ்சியது ஆச்சரியத்தை அளிக்கிறது. தனது சொந்த நிழலை கண்டே அஞ்சும் ஒரு தளபதி, போர்க்களத்தில் வீரர்களை எவ்வாறு வழிநடத்துவார் என்ற கேள்வி எழுகிறது. ராணுவ ஒழுக்கத்தின்படி, தனது வீரர்களை நேருக்கு நேர் சந்திக்க தயங்கும் ஒரு அதிகாரி, அந்த பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்பதே ராணுவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தற்காப்பு கொள்கை என்பது வீரத்தின் அடிப்படையில் அல்லாமல், பிழைப்புவாதத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது என்பதை முன்னாள் அதிகாரிகள் சிலரே ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அதிகபட்சம் 15 முதல் 20 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்றும், அதற்கு பிறகு அமெரிக்கா அல்லது சீனா போன்ற நாடுகளின் காலில் விழுந்து போரை நிறுத்த கெஞ்ச வேண்டும் என்பதே அவர்களின் திட்டமாக உள்ளது. இந்த ‘புள்ளிவிவர ரீதியான கோழைத்தனம்’ என்பது பாகிஸ்தான் ராணுவத்தின் வரலாற்றிலேயே ஊறியிருப்பதை, 1971 போருக்கு பிந்தைய நிகழ்வுகள் மற்றும் வங்கதேசத்தில் அவர்கள் நடத்திய மனித உரிமை மீறல்கள் மூலம் கர்னல் மயங்க் ஒப்பிட்டுக் காட்டினார்.
பாகிஸ்தானின் தற்போதைய நிலப்பரப்பு வரைபடத்தை ஆராயும் போது, அங்கு சிவில் யுத்தம் போன்ற சூழல் ஏற்கனவே தொடங்கிவிட்டதை உணர முடிகிறது. கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாடு முழுமையாக சிதைந்துவிட்டது. தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் மற்றும் பலுச் போராளிகள் ராணுவ நிலைகளை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். ஆச்சரியமான தகவல் என்னவென்றால், அமெரிக்காவிலிருந்து 50 ராணுவ அதிகாரிகள் ‘போலீசிங்’ பயிற்சி பெற்று பாகிஸ்தான் திரும்பியுள்ளனர். இது அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சியாகவும், ஆசிம் முனீர் நாட்டை மெல்ல மெல்ல ஒரு அடிமை நாடாக மாற்றி வருவதையும் உறுதிப்படுத்துகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகார படிநிலைகளில் நிலவும் இன ரீதியான பாகுபாடுகளும் அந்த நாட்டின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகின்றன. ஆரம்ப காலங்களில் பஷ்தூன் இனத்தை சேர்ந்தவர்கள் ராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தனர். ஆனால், மெல்ல மெல்ல பஞ்சாபி ஆதிக்கம் தலைதூக்கி, இன்று பஷ்தூன் இனத்தவர்கள் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இது ராணுவத்திற்குள் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், ஜேய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் காசா மற்றும் பிற நாடுகளுக்கு உதவ செல்வதாக கூறுவது, பாகிஸ்தான் ராணுவத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான எல்லைக்கோடு மறைந்துவிட்டதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இன்னொரு பக்கம் சிந்து நதி நீர் விவகாரம் மற்றும் எல்லையோர பாதுகாப்பில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு பாகிஸ்தானை நிலைகுலைய செய்துள்ளது. “வீட்டிற்குள் புகுந்து அடிப்போம்” என்ற இந்தியாவின் புதிய கொள்கை மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு, பாகிஸ்தான் ராணுவத்தின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து வருவதோடு, அந்த நாடு எதிர்காலத்தில் பல துண்டுகளாக சிதறும் என்பதையே இன்றைய கள நிலவரங்கள் உணர்த்துகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
