தண்ணி கிடையாது.. இந்தியா போலவே பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்திய ஆப்கானிஸ்தான்.. பாலைவனமாகிறதா பாகிஸ்தான்? ஒரு நாடு முன்னேற்றத்திற்கு சிந்திக்காமல், பக்கத்து நாட்டை அழிக்க இதுதான் கதி.. கதி கலங்கிய பாகிஸ்தான் மக்கள்..!

தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்குள் பாயும் குனார் ஆற்றில் அணை கட்ட திட்டமிட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரின் அளவை கட்டுப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு தலிபான் உச்ச தலைவர் மௌலவி…

afghanistan

தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்குள் பாயும் குனார் ஆற்றில் அணை கட்ட திட்டமிட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரின் அளவை கட்டுப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு தலிபான் உச்ச தலைவர் மௌலவி ஹிபதுல்லா அகுந்த்சாதா உத்தரவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உயிரிழப்புகளை ஏற்படுத்திய ஒரு போர் நிகழ்ந்து சில வாரங்களுக்குள்ளேயே, “தண்ணீருக்கான உரிமை” குறித்த இந்த வெளிப்படையான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தலிபான் உச்ச தலைவர் அகுந்த்சாதா, குனார் ஆற்றில் அணை கட்டும் பணியை கூடிய விரைவில் தொடங்குமாறும், வெளிநாட்டு நிறுவனங்களுக்காக காத்திருக்காமல் உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யுமாறும் நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த பிரகடனம், பாகிஸ்தானுடன் நீர் பகிர்வு குறித்து இந்தியா எடுத்த முடிவுக்கு பின்னால் வந்துள்ளது கவனிக்கத்தக்கது. ஏப்ரல் 22 அன்று பகல்காமில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 26 பொதுமக்களை கொன்றதையடுத்து, மூன்று மேற்கு ஆறுகளின் நீரை பகிர்ந்தளிக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

“இந்தியாவுக்குப் பிறகு, இப்போது பாகிஸ்தானுக்கு செல்லும் நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தானின் முறை வந்துள்ளது” என்று லண்டனை தளமாக கொண்ட ஆப்கானிய பத்திரிகையாளர் சாமி யூசப்ஸாய் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

480 கி.மீ நீளமுள்ள குனார் ஆறு, ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு இந்து குஷ் மலைகளில் உருவாகிறது. இது குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்கள் வழியாக பாய்ந்து, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்குள் நுழைகிறது. அங்கே அது காபூல் ஆற்றுடன் இணைகிறது.

குனார் பாயும் காபூல் ஆறு, ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிகப்பெரிய எல்லை தாண்டிய நதியாகும். இது அட்டோக்கிற்கு அருகில் சிந்து நதியுடன் இணைகிறது.

குனார் ஆற்றில் நீர் ஓட்டம் குறைந்தால், அது சிந்து நதியின் நீர் ஓட்டத்தில் தொடர் விளைவுகளை ஏற்படுத்தி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் நீர்ப்பாசன தேவைகளையும் கடுமையாக பாதிக்கும். பாகிஸ்தானின் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை ஒரு பெரிய பிராந்திய நீர் நெருக்கடியை உருவாக்கக்கூடும் என இஸ்லாமாபாத் எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இதுவரை முறைப்படியான இருதரப்பு நீர் பகிர்வு ஒப்பந்தம் எதையும் கொண்டிருக்கவில்லை. 2021-இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தலிபான் அரசாங்கம் நாட்டின் நீர் இறையாண்மையை பேணுவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அணை கட்டுமானம் மற்றும் நீர் மின்சார திட்டங்களை விரைவுபடுத்துவதன் மூலம் அண்டை நாடுகளின் மீதான தங்கள் நாட்டிற்கான சார்பை குறைக்க அவர்கள் இலக்கு வைத்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இந்த அதிரடி நடவடிக்கைக்கு டூரண்ட் கோடு எல்லையில் நடந்த மோதல்களும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

தலிபானின் இந்த அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மௌலவி அமீர் கான் முத்தகி இந்தியாவுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், ஹெராட்டில் இந்தியா உதவியுடன் கட்டப்பட்ட இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்பு அணை (சால்மா அணை) பராமரிப்பிற்காக இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் பாராட்டு தெரிவித்தது.

அத்துடன், ஆப்கானிஸ்தானின் எரிசக்தி தேவைகள் மற்றும் விவசாய வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் நீர் மின் திட்டங்களில் ஒத்துழைக்க இரு நாடுகளும் ஒப்பு கொண்டன. சால்மா அணைக்கு அப்பால், காபூல் ஆற்றின் துணை நதியான மைதான் ஆற்றில் ஷா தூத் அணை கட்டுவதற்கும் இந்தியா 250 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.