உலக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதுவரை உலகத்தின் தலையாய வல்லரசு நாடாக இருந்த அமெரிக்காவின் தலைமை பண்பு, அதன் கூட்டாளிகள் மத்தியில் கேள்விக்குறியாகி உள்ளது. ஆசிய நாடுகள் பல அமெரிக்காவிலிருந்து விலகி, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் புதிய உறவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்போது ஐரோப்பிய நாடுகளும் அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்து, அமெரிக்காவிலிருந்து விலகி செல்லத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபரின் தொடர்ச்சியான தவறான முடிவுகளால் அமெரிக்கா எதிர்காலத்தில் தனது வல்லரசு பட்டத்தை இழக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
டிரம்ப்பின் வரிவிதிப்பு கொள்கைகள் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அவரது தனிமைவாதமும், ஒருதலைப்பட்சமான முடிவுகளும், அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளிகளைக் கவலைக்குள்ளாக்கி உள்ளது. அதன் விளைவாக, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவுடன் புதிய உறவுகளை ஏற்படுத்தி, அமெரிக்காவிற்கு ஒரு மாற்று சக்தியாக தங்களை நிலைநிறுத்த முயற்சித்து வருகின்றன. இது உலக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தின் ஆரம்பம் எனக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அலாஸ்காவில் சந்திக்க உள்ளார். ஆனால், இந்த சந்திப்பு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை கலந்தாலோசிக்காமல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2020-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்தபோது, ஆப்கான் அரசாங்கத்தையே ஒதுக்கியது போல, டிரம்ப் தற்போது ஐரோப்பாவை ஓரங்கட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் ஐரோப்பாவின் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கும் என்பதால், ஐரோப்பிய நாடுகள் இந்த சந்திப்பை மிகவும் எச்சரிக்கையுடன் கவனித்து வருகின்றன.
அதிபர் டிரம்ப் ஒரு பக்கம் புடினுடன் பேசுவதற்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன. உதாரணமாக, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், உக்ரைனுக்கு £2 பில்லியனுக்கு மேல் கடன் உதவி வழங்குவதாக அறிவித்தார். இது, அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்காமல் ஐரோப்பா சொந்தமாக செயல்படத் தயாராகி வருவதை காட்டுகிறது. ஒரு காலத்தில் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்காவை நம்பியிருந்த ஐரோப்பா, இப்போது அமெரிக்காவை நம்பாமல் தனித்து செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தற்போது, ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமாகி உள்ளன. அதே சமயம், அமெரிக்கா தனது பாரம்பரிய கூட்டாளிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ரஷ்யாவுடன் நெருக்கமாக முயற்சித்து வருகிறார். டிரம்ப்பின் அடுத்தடுத்த தவறான முடிவுகள் அமெரிக்காவை ஒரு ஆபத்தான பாதையில் செலுத்தி வருவதாகவும், இது அமெரிக்காவின் நீண்டகால வல்லரசு அந்தஸ்தை ஆட்டம் காணச் செய்யும் என்றும் அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் தலைமை பண்பை உலக நாடுகள் கேள்விக்குள்ளாக்கும் இந்த சூழலில், இனி அமெரிக்காவை “வல்லரசு” என்று கூறுவது எவ்வளவு பொருத்தமானது என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
