ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சமீபத்தில் நடந்த மோதல்களை தொடர்ந்து, தற்போது கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர், பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் ஆப்கானிஸ்தான் மீது முழுநேர யுத்தத்தை தொடுக்க தயாராக இருப்பதாகத் திமிரான தொனியில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிரட்டல் பேச்சுக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் ஒரு ராஜதந்திர ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நகர்வை எடுத்துள்ளது. இது பாகிஸ்தானுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் நீர் ஆயுதம்
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் முக்கிய நதிகளில் ஒன்றான குனார் நதியில் அணை கட்ட தாலிபான்களின் உச்ச தலைவர் ஹயத்துல்லா அகுன்சாதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அணை கட்டும் பணியை உடனடியாக தொடங்கவும் அவர் ஆணையிட்டுள்ளார். இந்த அணை கட்டுமானத்தின் முக்கிய நோக்கம், குனார் நதியில் இருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் நீரின் அளவை கட்டுப்படுத்துவதே ஆகும்.
பாகிஸ்தானின் அச்சம்: ஏற்கனவே, கிழக்கு எல்லையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவிட்டு, நீரை ஒழுங்குபடுத்தி வருவதால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேற்கு எல்லையில் ஆப்கானிஸ்தானும் இதேபோல நதிநீரை கட்டுப்படுத்தினால், வடக்கு பாகிஸ்தானின் கைபர் பக்தன் குவா மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் உள்ள விவசாயம், தொழிற்சாலைகள் மற்றும் குடிநீர்ப் பற்றாக்குறை ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு பஞ்ச பிரதேசமாகிவிடும்.
ஆப்கானிஸ்தானின் இந்த நகர்வு, முன்பு இந்தியா எடுத்த ஒரு முக்கிய முடிவை ஒத்திருக்கிறது. இந்தியா, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி, நீரின் ஓட்டத்தை மாற்றியமைத்தபோது பாகிஸ்தான் வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற பெரும் தாக்கங்களை சந்தித்தது. இப்போது ஆப்கானிஸ்தானும் அதே ராஜதந்திர உத்தியை பயன்படுத்துகிறது.
சிந்து நதிநீர் பிரச்சனைக்கு சர்வதேச நீதிமன்றத்தை நாடவோ அல்லது தீர்ப்பாயம் அமைக்கவோ வாய்ப்புள்ளது. ஆனால், குனார் நதியை பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே எந்தவிதமான ஒப்பந்தமும் கிடையாது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் மீது சட்டரீதியான சவால் எதுவும் இல்லை.
சீனாவிற்குப் பாதிப்பு: இந்த நீரின் பற்றாக்குறை, பாகிஸ்தானில் சீனா முதலீடு செய்துள்ள பல்வேறு நீர் மின் உற்பத்தி திட்டங்களையும் கடுமையாக பாதிக்கும்.
ஆப்கானிஸ்தானின் நீர்வளத்துறை அமைச்சர் முல்லா அப்துல் லத்தீப் மன்சூர், “ஆப்கானிஸ்தானுக்கு அதன் சொந்த நீரை நிர்வகிக்க உரிமை உள்ளது” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த நகர்வுக்கு பின்னால் இந்தியாவின் ஐடியா இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டுவது, தாலிபான்கள் மற்றும் ஆப்கானியர்களின் ஈகோவை தூண்டி, பாகிஸ்தான் மீதான அவர்களின் பகையுணர்வை மேலும் அதிகப்படுத்தும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானின் இந்த திடீர் நடவடிக்கை, அரசியல் மிரட்டல்களுக்கு பதில், களத்தில் விரைவான வேலையை செய்ய தங்கள் நிர்வாகம் தயாராக இருப்பதை உணர்த்துவதாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
