ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியான Durand Line பகுதியில் தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடியாக, தாலிபான் படையினர் நவீன ட்ரோன்கள் மற்றும் கனரக ஆயுதங்களை கொண்டு பாகிஸ்தான் ராணுவ நிலைகளை தாக்கி வருகின்றனர்.
இந்த மோதலில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வெறும் எல்லை பிரச்சனை மட்டுமல்ல, அமெரிக்கா வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தான் மண்ணில் தாலிபான்கள் கைப்பற்றிய நவீன ஆயுதங்களின் பலத்தை உலகிற்கு பறைசாற்றும் ஒரு நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
தாலிபான்களின் நவீன பலமும் அமெரிக்க ஆயுதங்களும்18 ஆண்டு கால போருக்கு பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியபோது, சுமார் 7 டிரில்லியன் டாலர் மதிப்பிலான நவீன ஆயுதங்கள், போர் விமானங்கள் மற்றும் கவச வாகனங்களை தாலிபான்கள் வசம் விட்டு சென்றது. இன்று அந்த ஆயுதங்களே பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
அமெரிக்காவின் விமானங்களுக்கு இணையாக தாலிபான்கள் இன்று நவீன ட்ரோன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். “எங்களை ஒடுக்க நினைத்த அமெரிக்காவே தோற்று ஓடியது, பாகிஸ்தான் எம்மாத்திரம்?” என்ற தாலிபான்களின் வெளிப்படையான எச்சரிக்கை, அவர்கள் சித்தாந்த ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் எவ்வளவு வலிமை பெற்றுள்ளனர் என்பதை காட்டுகிறது.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. இந்தியா வரலாற்று ரீதியாகவே ஆப்கானிஸ்தான் மக்களுடன் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கட்டிடம் முதல் பல அணைகள் மற்றும் சாலைகளை இந்தியா கட்டி கொடுத்துள்ளது. சுமார் $2 பில்லியன் டாலர் வரை இந்தியா அங்கு முதலீடு செய்துள்ளது. தாலிபான் ஆட்சியை இந்தியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காவிட்டாலும், மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை தொடர்ந்து வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நிரந்தர எதிரிகளை எதிர்கொள்ளும் இந்தியாவிற்கு, ஆப்கானிஸ்தானின் நட்பு ஒரு கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையில் சிக்கியுள்ளது. இம்ரான் கான் சிறையில் உள்ள நிலையில், தற்போதைய அரசு அமெரிக்காவின் ஆதரவை முழுமையாக நம்பியுள்ளது. அமெரிக்கா தனது ராணுவத் தளம் ஒன்றை ஆப்கானிஸ்தானில் மீண்டும் பெற முயன்றது, ஆனால் தாலிபான்கள் அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதன் விளைவாகவே, அமெரிக்காவின் தூண்டுதலால் பாகிஸ்தான் இத்தகைய தாக்குதல்களை முன்னெடுப்பதாக தாலிபான்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
‘தெஹ்ரிக்-இ-தாலிபான்’ என்ற தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க முயல்வது, பாகிஸ்தான் ராணுவத்திற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த மோதலில் மத ரீதியான கூறுகளும் கலந்திருக்கின்றன. ஆப்கானிஸ்தான் ஒரு முழுமையான சுன்னா இஸ்லாமிய நாடாக தங்களை அறிவித்து கொண்டுள்ளது. ஈரான் போன்ற ஷியா முஸ்லிம் நாடுகள் இந்த போரை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியுள்ளன. இருப்பினும், பாகிஸ்தான் தனது வான்வழி தாக்குதலை நிறுத்தாத வரை தாலிபான்கள் பின்வாங்க போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.
இது பாகிஸ்தானை பொறுத்தவரை மற்றுமொரு 1971 போன்ற பிளவை அல்லது அழிவை நோக்கி இட்டு செல்லக்கூடும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். பாகிஸ்தான் தனது சொந்த நாட்டு பாதுகாப்பிற்காக பயன்படுத்த வேண்டிய பலத்தை, அண்டை நாட்டுடன் போரிட பயன்படுத்துவது அந்த நாட்டுக்கே பாதகமாக முடியும். தாலிபான்கள் “எங்கள் மண்ணில் கால் வைப்பவர்கள் ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை” என்பதை சோவியத் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு நிரூபித்து காட்டியுள்ளனர்.
தற்போது பாகிஸ்தான் அதே தவறை செய்து வருகிறது. இந்தியா அமைதியை கடைப்பிடித்தாலும், தனது எல்லை பாதுகாப்பில் மிக தீவிரமாக உள்ளது. இந்த போர் நீண்ட காலம் நீடித்தால், அது தெற்காசியாவின் வரைபடத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
