கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் அரசியல் நிலைமை, குறிப்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருடன் இருக்கின்றாரா? அல்லது கொலை செய்யப்பட்டுவிட்டாரா? போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி உண்மை இல்லை என்று பாகிஸ்தான் அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அவரது நிலைமை சீராக இல்லை என்பதே யதார்த்தம். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு 2023-ல் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 22 நாட்களாக அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் கூட அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல், அவர் நலமாக இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது. நீதித்துறை அனுமதித்தும் சிறை நிர்வாகம் சந்திக்க அனுமதிக்காதது, பாகிஸ்தானில் நீதித்துறையின் அதிகாரம் எந்த அளவுக்கு குறைந்துள்ளது என்பதை காட்டுகிறது.
கிரிக்கெட் உலகின் முகமாக இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் இன்று சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கு காரணம், அவர் வெளிநாட்டு கொள்கையில் எடுத்த சில நிலைப்பாடுகள்தான் என கூறப்படுகிறது. இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்தபோது, அமெரிக்காவுக்கு எதிராக பேசியதுதான் அவருக்கு பிரச்சனைகளை தொடங்கியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் பயங்கரவாதிகளை அமெரிக்கா உருவாக்குகிறது என்று அவர் கூறியதோடு, அமெரிக்காவுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்தார். இது சி.ஐ.ஏ. மற்றும் அதன் கூட்டாளி என்று கூறப்படும் ஐ.எஸ்.ஐ. ஆகிய இரு நெட்வொர்க்குகளின் கோபத்திற்கு ஆளாகி, அதன் விளைவாகவே அவர் பழி வாங்கப்பட்டார் என்றும், அதன் தொடர்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் பாகிஸ்தான் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு ஆபத்தான கைபர் பக்துன்க்வா மாகாணம்
இம்ரான் கானின் கைதுக்கு பிறகு, அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மாகாணம் கொந்தளிப்பான சூழலில் உள்ளது. இந்த மாகாணத்தின் முதலமைச்சர் ஷோஹைல் கான் அப்ரீடி, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
ஒருபுறம் அதிகாரங்களை மொத்தமாக குவித்துள்ள அசிம் முனீருக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், மறுபுறம் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு காவலர்கள் மீதும், எரிவாயுக் குழாய்கள் மீதும் கொடூரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் எல்லை தாண்டி ட்ரோன் தாக்குதல் நடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ். கொரசான் போன்ற பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களை கொன்றிருப்பது, கைபர் பக்துன்க்வாவின் பாதுகாப்பு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதை காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
