94 நாட்கள் நடுக்கடலில் சிக்கிய மீனவர் ஒருவர், தற்செயலாக கப்பல் படையினரால் மீட்கப்பட்டார். கரைக்கு வந்ததும், “கடல் மாதா என்னை கொல்ல மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் நான் உயிர்வாழ்கிறேன்,” என்ற அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டைச் சேர்ந்த மேக்ஸிமா நபா என்ற மீனவர், கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி மார்கோனா என்ற துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றார். அப்போது திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றம் மற்றும் கடல் ஓட்டம் காரணமாக, அவரது படகு வழிதவறி வேறு திசையில் செல்லப்பட்டது. அவரிடம் ஜிபிஎஸ் போன்ற கருவிகள் எதுவும் இல்லாததால், கரைக்கு எப்படி செல்லலாம் என தெரியாமல் நடுக்கடலில் தத்தளித்தார்.
நாட்கள் கடந்தபோதும், நம்பிக்கையை இழக்காமல் கடலில் இருந்து மீன், ஆமை, நண்டுகள் போன்றவற்றைப் பிடித்து சாப்பிட்டு உயிரைக் காத்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். “நான் இறக்க விரும்பவில்லை. என் கடல் தாயை நினைத்தேன். என் கடல் தாய் கண்டிப்பாக என் உயிரை எடுக்க மாட்டாள். அதுமட்டுமின்றி, எனக்கு இரண்டு மாத பேத்தி இருக்கிறார். அவரை மீண்டும் பார்க்க வேண்டும் என்று மன உறுதியுடன் இருந்தேன். ஒவ்வொரு நாளும் என் தாயையும் கடவுளையும் வணங்கினேன்,” என்று கூறினார்.
இந்த நிலையில், நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மேக்ஸிமா நபாவை, அந்த வழியாக சென்ற ஒரு கப்பல் தற்செயலாக கண்டுபிடித்து, அவரை மீட்டுக் கொண்டது. அதன் பின்னர், அவரை அருகில் உள்ள சிம்போடோ என்ற நகரில் இறக்கிவிட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “அவரது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்,” என்று தெரிவித்தனர். முதல் உதவி அளித்த பின்னர், அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.
தனது குடும்பத்தை மீண்டும் சந்தித்த மேக்ஸிமா நபா, மகிழ்ச்சியுடன் வீட்டிற்குத் திரும்பினார். அவரது மகன், “எங்கள் அப்பா உயிருடன் இருப்பார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. கடவுள்தான் அவரை காப்பாற்றினார்,” என்று உள்ளூர் வானொலிக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும், “எங்கள் குடும்பம் அவரை கண்டுபிடிக்க பல முயற்சிகள் செய்தோம். ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்துவிட்டோம். ஆனால் அவர் உறுதியுடன் இருக்க, இறுதியில் எங்களை வந்து சேர்ந்தார்,” என்றும் மகன் உருக்கமாக தெரிவித்தார்.