அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு $686 மில்லியன் டாலர் மதிப்புள்ள F-16 விமான பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு தொகுப்பை அங்கீகரித்துள்ளது. இது ஒரு வழக்கமான மேம்பாடு என்று கூறப்பட்டாலும், இது பாகிஸ்தானின் விமானப்படையில் இந்திய தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடுகட்டும் விதமாக செய்யப்படும் விமானங்களை மாற்றுவதற்கான நடவடிக்கையாக இருக்கலாம் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட F-16 தொகுப்புகளில் இதுவே மிகப்பெரிய தொகையாகும்.
இந்த தொகை, முந்தைய F-16 பேக்கேஜ்களை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் $450 மில்லியன் டாலர் தொகையை அங்கீகரித்த நிலையில், தற்போது 6 மாதங்களுக்குள் இந்த $686 மில்லியன் டாலர் பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. F-16 விமானத்தின் ஒரு யூனிட் மதிப்பு $30 முதல் $60 மில்லியன் டாலர் வரை இருக்கும் நிலையில், இந்த தொகை பல விமானங்களின் மாற்றுதல் அல்லது பெரிய பழுதுகளை செய்வதை குறிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள உதிரி பாகங்கள் மற்றும் சேவைகளின் பட்டியல், இது சாதாரண பராமரிப்பு அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது. இதில் மிஷன் கம்ப்யூட்டர் கார்டுகள், சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அலகுகள், பாதுகாப்பான தரவு தொகுதிகள், விமான அமைப்பின் பலவீனமான பகுதிகளுக்கான புதிய கட்டமைப்பு பாகங்கள், ஃபியூசலேஜ் நடுப்பகுதி மாற்றுதல்கள், மற்றும் இன்ஜின் பாகங்கள் ஆகியவை அடங்கும். இவை பெரும்பாலும் உற்பத்தி செய்யப்பட வேண்டிய கூறுகள் ஆகும்; சாதாரண உதிரி பாகங்கள் அல்ல.
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின்போது, குறிப்பாக ஷாபாஸ் தளத்தில், பாகிஸ்தானுக்கு சொந்தமான பல F-16 விமானங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது பலத்த சேதமடைந்திருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, அந்த இழப்புகளை ஈடுசெய்ய மறைமுகமாக உதவும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் விமானப்படை எட்டு முதல் ஒன்பது F-16 விமானங்களை இழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அமெரிக்கா நேரடியாக புதிய விமானங்களை விற்க முடியாத சூழ்நிலையில், இந்த மேம்பாட்டுத் தொகுப்பு என்ற பெயரில் பழைய விமானங்களை செப்பனிட்டு வழங்கவோ அல்லது வேறு நாடுகளில் இருந்து பழைய விமானங்களை மாற்றி வழங்கவோ வாய்ப்புள்ளது.
முன்னதாக, 2019 ஆம் ஆண்டில் இந்தியா Mig-21 விமானம் மூலம் ஒரு பாகிஸ்தான் F-16 ஐ தாக்கி அழித்தபோது, அமெரிக்கா இதேபோல மாற்று விமானங்களை வழங்கியதாகவும், ஜோர்டான், ருமேனியா, தைவான் போன்ற நாடுகளுக்கும் இதேபோல ‘மேம்பாட்டு தொகுப்பு’ என்ற பெயரில் புதிய விமானங்களை அமெரிக்கா வழங்கியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையானது, F-16 விமானங்களை அப்கிரேட் செய்ய ஆகும் செலவை விட பல மடங்கு அதிகம்.
இந்த விமானங்களை மாற்றி வழங்குவதற்கு தேவையான பழைய F-16 விமானங்களை அமெரிக்கா, தனது சேமிப்பு கிடங்கில் இருந்தோ அல்லது ஜோர்ஜியன் ஃபிளீட் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளின் கிடங்குகளில் இருந்தோ எடுத்து, புதுப்பித்து பாகிஸ்தானுக்கு வழங்கலாம் என்றும், இதே விமானங்கள் உக்ரைனுக்கு வழங்குவதற்காக கூட பங்குகளில் இருந்து சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து ஜே-10 போர் விமானங்களை நாடுவதை தடுப்பதற்கான அமெரிக்காவின் ஒரு முயற்சி என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
