அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை குறைக்க போவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு அமெரிக்க பொருளாதாரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஆனால், பொருளாதார நிபுணர்கள் இந்த நடவடிக்கையால் வேலைவாய்ப்பு அதிகரிக்குமா என்பது சந்தேகமே என்று கருதுகின்றனர். மேலும், இந்த முடிவு அமெரிக்க பொருளாதாரத்தை தேக்கநிலை-பணவீக்கத்தை நோக்கி தள்ளக்கூடும் என எச்சரிக்கின்றனர்.
வட்டி விகிதக் குறைப்பு ஒரு தவறான முடிவு?
பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, அமெரிக்க பொருளாதாரம் ஏற்கெனவே சிக்கலில் உள்ளது. ஆனால், வட்டி விகித குறைப்பு மட்டுமே வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்பது தவறான கருத்து. அண்மையில், அமெரிக்காவின் தொழிலாளர் புள்ளிவிவர தலைவர் பணி நீக்கம் செய்யப்பட்டதை குறிப்பிட்டு, அமெரிக்க அரசு யதார்த்தமான பொருளாதார நிலைமையை ஏற்க விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என்று நிபுணர்கள் விமர்சித்துள்ளனர். வட்டி விகித குறைப்பு ஒரு தவறான முடிவு என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஏனெனில், இது தங்கத்தின் விலையை அதிகரிக்கச் செய்து, அமெரிக்க டாலரின் மதிப்பை மேலும் குறைக்கக்கூடும்.
அமெரிக்க அரசின் மறைமுக வரிகளை அதிகரித்து, நேரடி வரிகளை குறைக்கும் கொள்கையும் விசித்திரமானது என்று கருதப்படுகிறது. இது நுகர்வு சார்ந்த பொருளாதாரத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போதைக்கு தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், இந்த முடிவுகள் அமெரிக்காவை தேக்கநிலை-பணவீக்கத்தை நோக்கி இட்டு செல்லும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
தங்கம் மற்றும் பங்குச்சந்தையின் எதிர்காலம்
சந்தைகள் ஜெரோம் பவலின் இந்த முடிவை கொண்டாடினாலும், இது ஒரு தற்காலிக எழுச்சி மட்டுமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரித்தால், வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் அத்தகைய கடுமையான முடிவுகளை எடுக்காது என்று கணிக்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. அடுத்த 24 மாதங்களில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 4,000 டாலராக உயரும் என்றும், இந்திய ரூபாயில் வரியுடன் சேர்த்து ஒரு சவரன் தங்கம் ரூ.11,500 முதல் ரூ.12,000-ஐ தாண்டும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ள இந்தியர்கள், தங்கள் உபரி நிதியை டாலரிலிருந்து யூரோ அல்லது ஸ்விஸ் ஃபிராங்கிற்கு மாற்றுவது பற்றி ஆலோசித்து வருகின்றனர். டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைய வாய்ப்பு இருப்பதே இதற்கு முக்கியக் காரணம். மேலும், அமெரிக்க பங்குச்சந்தையில் தற்போது சில பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டுவரும் நிலையில், முதலீட்டை நிறுத்திவிட்டு ஜப்பானில் உள்ள மதிப்பு சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வது நல்லது என்றும் பலர் பரிந்துரைக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
