இனி புடு.. புடு.. புல்லட் சத்தமே இருக்காது..! எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் குதித்த ராயல் என்ஃபீல்டு.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

By John A

Published:

ஒவ்வொரு இளைஞருக்கும் வாங்குனா இப்படி ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கனும் என்று கனவு காண வைத்த பெருமையைப் படைத்தது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள். பார்ப்பதற்கே தோரணையாக, பந்தாவாக இருக்கும் ராயல் என்பீல்டின் மோட்டார் சைக்கிள்களில் ஒரு ரவுண்டு வந்தாலே தனி கெத்து தான். அதிலும் சொந்தமாக இருந்தால் அந்த சுகமே தனிதான். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட், ஹிமாலயன், Interceptor, Classic, Short gun போன்ற பைக்குகள் இந்திய சாலைகளை ஆக்கிரமித்துச் செல்கின்றன.

அதிலும் குறிப்பாக இன்ஜினிலிருந்து வரும் அந்த சப்தமே ஒரு தனி அனுபவத்தைக் கொடுக்கும். அரை கிலோமீட்டர் தூரத்தில் வந்தாலும் இந்த சப்தம் மட்டுமே தனியாகத் தெரியும். அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் கனவு வாகனமாக உள்ளது ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகள். இந்நிலையில் நாளுக்கு நாள் அனைத்து மோட்டார், கார் கம்பெனிகளும் எலக்ட்ரிக் வாகனத்திற்கு மாறிவரும் சூழலில் ராயல் என்பீல்டும் விதிவிலக்கல்ல என்பது போல் மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இறங்க உள்ளது.

இனி போட்டோஷாப் தேவையில்லை. ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய செயலி..!

ராயல் என்பீல்டு நிறுவனம் Flying Flea C6 என்று அழைக்கக் கூடிய புதிய மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் லுக் தற்போது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பினை ஏற்படுத்தியிருக்கிறது. சிங்கிள் சீட் மற்றும் அலாய் வீல் கொண்டுள்ள இந்த Flying Flea C6 ஸ்டைலிஷான தோற்றத்தையும் கொண்டிருக்கிறது. அகலமான ஹேண்ட்பார்கள் மற்றும் ஒல்லியான வடிவமும் கொண்டுள்ளது.

மேலும் Flying Flea C6 -ன் டேங்க் வடிமைப்பு, மற்றும் முன்புற வடிவமைப்பு ஓட்டுநருக்கு புது பயண அனுபவத்தைத் தரும் விதமாக உயரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஹெட்லைட்டைப் பொறுத்தவரை வட்ட வடிவில் அமைந்துள்ளது. சுற்றிலும் அலுமினியம் பிரேமில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எடை மற்றும் கூலிங் ஆகியவற்றிற்கு உதவுகிறது.

2026-ம் ஆண்டு முதல் Flying Flea C6 விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.5லட்சம் இருக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகிறது.