ஜப்பானில் இப்போது முழுக்க முழுக்க தானியங்கி முறையில் தனிநபர் சுகாதாரத்தை பேணும் ஒரு புதுமையான தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பெயர்தான் ‘மிராய் மனித சலவை இயந்திரம்’ . ஜப்பானிய நிறுவனமான சயின்ஸ் இன்க் உருவாக்கியுள்ள இந்த குளியல் பெட்டி , ஒரு முழு மனிதனையும் 15 நிமிடங்களுக்குள் குளிப்பாட்டி, அலசி, உலர வைக்கக்கூடிய திறன் கொண்டது. ஒசாகா கண்காட்சியில் அறிமுகமானபோதே பெரும் கவனத்தை ஈர்த்த இந்த சாதனம், சந்தையில் நுழைந்திருக்கும் நிலையில், இது நடைமுறைக்கு உகந்ததா? அல்லது விலையுயர்ந்த பகட்டான பொருளா? என்ற கேள்வி உலக அளவில் எழுந்துள்ளது.
இந்த மிராய் சலவை இயந்திரம், ஒரு முழு உடலுக்கான தானியங்கி குளியல் கூண்டு ஆகும். நமது கைகள் பயன்படுத்தாமல், உயர் தொழில்நுட்ப நுரை நீரோடைகள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட சுகாதார கண்காணிப்பு கருவிகள் மூலம் சுத்தம் செய்யும் அனுபவத்தை வழங்குகிறது. பயனர் உள்ளே நுழைந்தவுடன் கதவு மூடப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட சூழல் உருவாக்கப்படுகிறது. பின்னர், நுண்துளைகள் வழியாக எண்ணெய், அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கும் நுண்ணிய நுரைகள் வெளியிடப்படுகின்றன. சுழற்சியின்போது மென்மையான இசை இயக்கப்பட்டு, உடலில் உள்ள நுரை அலசப்பட்டு, அதே சாய்ந்த நிலையில் முழு உடலும் உலர்த்தப்படுகிறது.
இந்த இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் நுண்ணிய நுரை தொழில்நுட்பம் ஆழமான துளைக்குள் ஊடுருவல், எண்ணெய் நீக்கம் மற்றும் குறைவான தண்ணீர் பயன்பாடு ஆகிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்த ஐடியா முற்றிலும் புதியதல்ல; ஏற்கனவே 1970 ஆம் ஆண்டு ஒசாகா கண்காட்சியிலேயே காட்சிப்படுத்தப்பட்டது. சயின்ஸ் இன்க் நிறுவனத்தின் தலைவர் யசுக்கி ஆவோயாமா குழந்தையாக இருந்தபோது அந்த கருவியைப் பார்த்ததை நினைவுகூர்ந்து, அரை நூற்றாண்டுக்கு பிறகு, நவீன ரோபாட்டிக்ஸ் மற்றும் சென்சார் தொழில்நுட்பத்துடன் இந்த யோசனையை மீண்டும் கொண்டு வந்துள்ளார்.
மிராய் இயந்திரம் குளியலறைகளுக்கு மாற்றாக வரவில்லை என்று சயின்ஸ் இன்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முதன்மையாக ஒரு ஆடம்பரமான ஆரோக்கிய அனுபவமாகவே சந்தைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உடலை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், ஆன்மாவைக் கழுவுவது தான் இதன் நோக்கம் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சச்சிகோ மேகுரா குறிப்பிட்டுள்ளார். பயோமெட்ரிக் கண்காணிப்பு மற்றும் ரிலாக்ஸ் ஆகியவற்றின் கலவையுடன், இந்த சாதனம் ஒரு உயர்தர ஸ்பா சிகிச்சைக்கும், தனிப்பட்ட பராமரிப்பு ரோபோவிற்கும் இடைப்பட்ட இடத்தில் அமைகிறது.
இந்த சௌகரியம் மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கிறது. முதல் தலைமுறை மிராய் மாதிரியின் விலை சுமார் 60 மில்லியன் யென் இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.50 கோடி ஆகும். ஒவ்வொரு யூனிட்டும் கையால் தயாரிக்கப்படுவதால், அதிக விலைக்கான காரணங்களில் நவீன ஹார்ட்வேர், பயோமெட்ரிக் சென்சார்கள் மற்றும் நுண்ணிய நுரை விநியோக அமைப்புகள் ஆகியவை அடங்கும். தற்போதைய நிலையில், சொகுசு ஹோட்டல்கள், உயர்நிலை ஸ்பா நிலையங்கள், பிரத்யேக ஓய்வு விடுதிகள் மற்றும் மருத்துவ பராமரிப்பு நிறுவனங்களை இலக்காக கொண்டே இந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஹோட்டல் ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், உற்பத்தி திறன் அதிகரித்தால், மிராய் இயந்திரத்தின் மலிவு விலை வீட்டு பதிப்பும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
