ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை மூன்று நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்தால் தானாகவே Reboot ஆகும் என்று புதிய அப்டேட்டை கூகுள் அறிவித்துள்ளது.
கூகுள் பிளே சர்வீஸ் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சத்தில், உங்கள் ஆண்ட்ராய்டு போன் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பயன்படுத்தாமல் இருந்தால் அல்லது சுவிட்ச் ஆஃப் இருந்தால், Rebootசெய்யப்படும் என்பதை உறுதி செய்துள்ளது.
இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் மட்டுமின்றி டேப்லெட்டுகளுக்கும் பொருந்தும் என்றும், ஆனால் அதே நேரத்தில் ஆண்ட்ராய்டு டிவியை இது பாதிக்காது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் இருக்கும் ஆண்ட்ராய்டு போன், Rebootசெய்யப்பட்டவுடன் அன்லாக் செய்தால் மட்டுமே மீண்டும் செயல்பட தொடங்கும் என்றும், அதுமட்டுமின்றி கைரேகை அல்லது முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரம் முறைகள் உள்ளிடப்படும் வரை போன் ஓப்பன் ஆகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி தற்போது புதுப்பிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு அம்சத்தில் உள்ளது என்றும், பயனர்களின் பாதுகாப்பை கருதி இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூகுளின் இந்த புதிய நடவடிக்கை காரணமாக, உங்கள் ஆண்ட்ராய்டு போன் தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, அதில் உள்ள டேட்டாக்களை வெளியே எடுப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஆப்பிள் ஐபோனில் இந்த அம்சம் உள்ளது என்பதும், ஆப்பிள் ஐபோனில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படாமல் அல்லது சுவிட்ச் ஆஃப்பில் இருந்தால் Reboot செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.