வழக்கறிஞர் வில்சன் குறித்து ஓபன் கோர்ட்டில் விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி.. வழக்கறிஞர் சங்கங்கள் புகார்

By Keerthana

Published:

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கண்ணியக்குறைவாக நடந்ததாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளார்கள் . இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டிஎன்பிஎஸ்சி வழக்கிற்காக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக எம்.பியுமான பி.வில்சன் ஆஜராகினார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி விக்டோரிய கவுரி, இருதரப்பு வாதங்களை கேட்டு, மனுதாரருக்கு சாதகமாக இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தார். தனி நீதிபதி விக்டோரியா கவுரியின் உத்தரவை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி. ஆர் சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது . பொதுவாக தனி நீதிபதியின் உத்தரவை மேல்முறையீடு செய்யும் போது ஏற்கனவே அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு அந்த வழக்கு வராது. ஆனால் இந்த வழக்கில் நீதிபதி சுப்பிரமணியனுடன், தனி நீதிபதி விக்டோரியா கவுரியும் இருந்தார்.

இந்த மேல் முறையீட்டு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், டிஎன்பிஎஸ்சி வழக்கில் நீதிபதி விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவை சுட்டிக் காட்டி பேசினார். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியனோ, நீதிபதி கவுரியை இந்த வழக்கிலிருந்து வில்சன் விலக சொல்வதாக நினைத்துக் கொண்டு அவரை கோர்ட்டிலேயே அவரை விமர்சித்தாராம்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கண்ணியக்குறைவாக நடந்ததாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளார்கள் . இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் தங்களுக்கு கீழானவர்கள் என்ற தவறான எண்ணத்தை சில நீதிபதிகள் கொண்டுள்ளனர். நீதி பரிபாலனத்தில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் ஒரு தேரின் இருசக்கரங்கள் என்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர் மற்றும் வழக்கில் ஆஜரான வழக்கறிஞரை நோக்கி கண்ணிய குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் கூடுதல் நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகளும், வழக்கறிஞர்களை உரிய மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவதை உறுதிசெய்ய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தாலோ, தவறாக நடந்து கொண்டாலோ, அதுகுறித்து வழக்கறிஞர்கள் புகார் அளிக்க குறை தீர்ப்பு நடைமுறை கொண்டு வர வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது