தமிழக அரசியல் களத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நிலைப்பாடு, அவர் எடுக்கும் முடிவுகள் மற்றும் அவரது அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் கடந்த சில நாடளாக ஊடகங்களில் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, சமீபத்தில் டெல்லியில் நடந்த பாஜக தமிழக தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ளாதது, அவரது முக்கியத்துவம் குறைந்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் ஒருசில கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மை நிலை என்ன என்பதை பார்ப்போம்.
அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவரான பின்னர் தான் அக்கட்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளார் என்பதில் மாற்று கருத்து இல்லை. பாஜகவை இரட்டை இலக்க சதவீத வாக்குகளுக்கு கொண்டு வந்தவர் அண்ணாமலைதான். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் பாஜக கடந்த காலத்தில் இடம் பெறாததற்கு அண்ணாமலை தான் காரணம். கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருந்தால் குறைந்தது 10 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். அண்ணாமலை சில சர்ச்சைக்குரிய பேச்சு தான் கூட்டணியை உடைத்தது என்பதும் உண்மை.
ஆனால் அதே நேரத்தில் பாஜகவுக்கு கிடைத்த வாக்குகளில் அண்ணாமலையின் தனிப்பட்ட உழைப்பால் கிடைத்த வாக்குகள் மட்டுமே 50% ஆகும். இது மேலிட தலைமைக்கு தெரியும். அதனால், அண்ணாமலையை தற்போதைக்கு தலைவர் பதவியில் இருந்து தூக்கியிருந்தாலும் எளிதில் இழக்க பாஜக விரும்பாது.
அண்ணாமலை சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது, தனது முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக அவர் கருதுகிறாரா என்ற கேள்விக்கு, “முக்கியத்துவம் குறைந்தது உண்மைதான், ஆனால். அதேசமயம், இது ஒரு இராஜதந்திர நகர்வாகவும் இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சிறந்த அரசியல்வாதி ஆவேசமாக இருக்க வேண்டிய நேரத்தில் ஆவேசமாக இருக்க வேண்டும், அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அமைதியாக இருக்க வேண்டும். அரசியலை படித்த அண்ணாமலை இப்போது தனது அமைதியான நேரம் என்பதை புரிந்து கொண்டு மெளனம் காக்கிறார்.
இப்போது அவர் அமைதியாக இருந்தாலும், வரவிருக்கும் தேர்தல்களில், சீட் பங்கீட்டில்தான் அண்ணாமலையின் பலம் வெளிப்படும். தனக்கு ஆதரவானவர்களுக்கு 50% சீட்டுகளை பெற அவர் முயற்சி செய்வார். இதுவே அவரது முக்கிய நோக்கமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோர் வெளியேறியதற்கு அண்ணாமலைதான் பின்னணியில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இதற்கும் அரசியல் விமர்சகர்கள் பதில் கூறியுள்ளனர். டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோர் சுதந்திரமான தலைவர்கள், அவர்களுக்கு சொந்த முடிவெடுக்கும் திறன் உள்ளது, அண்ணாமலை தனிப்பட்ட முறையில் டிடிவி தினகரனுக்கு என்டிஏ கூட்டணியில் நுழைய ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார் என்றும், இப்போது மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று தினகரன் அளித்த பேட்டியிலும் அண்ணாமலை தலைவராக இருந்தவரை உறவு சுமூகமாக சென்றதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் அண்ணாமலை, தமிழக பாஜகவில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். அவர் தற்போது பின்பற்றும் அமைதிப்பாதை, தனது அரசியல் பலத்தை நிரூபிப்பதற்கான ஒரு உத்தியாகவே இருக்கலாம். டெல்லி தலைமை, அண்ணாமலையின் உழைப்பையும், அவரது தனிப்பட்ட செல்வாக்கையும் உணர்ந்துள்ளது. இதனால், வரும் நாட்களில் அண்ணாமலையின் நிலைப்பாடும், அவரது அடுத்தடுத்த நகர்வுகளும் தமிழக அரசியல் களத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
