தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆருக்கு பிறகு பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்தாலும், அவர்களால் ஏன் அவர் அளவுக்கு ஒரு மாபெரும் வெற்றியை பெற முடியவில்லை என்ற கேள்வி நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு கூறப்படும் மிக முக்கியமான மற்றும் அடிப்படையான காரணம் ‘அரசியல் பின்புலம்’. எம்.ஜி.ஆர் அவர்கள் 1972-ல் அதிமுகவை தொடங்குவதற்கு முன்பே, பல ஆண்டுகள் திமுகவில் ஒரு தீவிரமான அரசியல்வாதியாக செயல்பட்டு வந்தார். அவர் அக்கட்சியின் பொருளாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து அடிமட்ட தொண்டர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தார். திரைத்துறையில் இருந்தபோதே தனது படங்களில் திராவிட கொள்கைகளை பரப்பி, ஒரு ‘அரசியல் பிம்பத்தை’ மக்கள் மனதில் ஆழமாக பதிவு செய்திருந்தார்.
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, அவருக்கு ஏற்கனவே திமுகவில் ஒரு பெரும் வாக்கு வங்கி இருந்தது. அவர் பிரிந்தபோது திமுகவின் ஒரு பெரும் பகுதி தொண்டர்கள் மற்றும் கிளை கழகங்கள், முக்கிய தலைவர்கள் அப்படியே அவரோடு சென்றன. அதாவது, அவர் பூஜ்ஜியத்திலிருந்து ஒரு கட்சியை தொடங்கவில்லை; மாறாக, ஏற்கனவே இருந்த ஒரு மாபெரும் பேரியக்கத்தின் ஒரு பகுதியை தன்னோடு பிரித்து கொண்டு சென்றார். ஆனால், அவருக்கு பின் வந்த விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் அத்தகைய பலமான அரசியல் அடித்தளமோ அல்லது ஒரு பெரிய கட்சியிலிருந்து பிரிந்து வந்த தொண்டர் படையோ இல்லாமல் நேரடியாக திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தனர். இதுவே அவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
கேப்டன் விஜயகாந்த் 2005-ல் தேமுதிகவை தொடங்கியபோது ஒரு மாற்று சக்தியாக தென்பட்டாலும், காலப்போக்கில் பலமான கூட்டணி பலம் இன்றி அவரது வாக்கு வங்கி சிதறியது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நகர்ப்புற வாக்குகளை பெற்றாலும், கிராமப்புறங்களில் உள்ள அடித்தட்டு மக்களின் நம்பிக்கையை பெறத் தவறியது. சரத்குமார், கார்த்திக் போன்றவர்கள் ஜாதி ரீதியான வாக்குகளை குறிவைத்தாலும், அவர்களால் மாநிலம் தழுவிய ஒரு செல்வாக்கை உருவாக்க முடியவில்லை. நேற்று வரை ஒப்பனை போட்டுக்கொண்டு நடித்த ஒரு நடிகர், இன்று திடீரென ஒரு கொடியை ஏந்திக்கொண்டு “நான்தான் உங்கள் அடுத்த முதல்வர்” என்று சொன்னால், அரசியல் விழிப்புணர்வு கொண்ட தமிழக மக்கள் அதை ஏற்று கொள்ள தயாராக இல்லை என்பது அவர்களது தோல்வியில் இருந்து தெரிகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது இதே பாதையில் பயணிக்கிறதா அல்லது அவர் ஒரு விதிவிலக்கா என்ற விவாதம் 2026 தேர்தல் முடிவில் தெரிய வரும். விஜய் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்றாலும், தனது ரசிகர் மன்றமான ‘விஜய் மக்கள் இயக்கம்’ மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து, ஒரு வலுவான கட்டமைப்பை அடிமட்டத்தில் உருவாக்கியுள்ளார். அவர் மற்ற நடிகர்களை போல தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வராமல், மிக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார். இருப்பினும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததை போன்ற ஒரு திராவிட இயக்க பின்புலமோ அல்லது பலமான அரசியல் சித்தாந்த பயிற்சியோ அவருக்கு இல்லை என்பது ஒரு பலவீனமாக கருதப்படுகிறது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளும் பல ஆண்டு கால போராட்டங்கள், சிறைவாசங்கள் மற்றும் கொள்கை பிடிப்பால் வளர்ந்தவை. அந்த இடத்தை சினிமா புகழை மட்டும் வைத்துக்கொண்டு நிரப்பிவிட முடியாது என்பதை தமிழக மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவ கொள்கையை முன்வைத்தாலும், அது மக்களிடையே எத்தகைய வாக்குகளாக மாறும் என்பது இன்னும் புதிராகவே உள்ளது. 2026 தேர்தலில் அவர் ஒரு தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்தால் மட்டுமே, ‘நடிகர்களால் ஜெயிக்க முடியாது’ என்ற பிம்பத்தை அவரால் உடைக்க முடியும்.
முடிவாக, எம்.ஜி.ஆரின் வெற்றி என்பது அவரது சினிமா கவர்ச்சியால் மட்டும் வந்ததல்ல; அது திமுகவில் அவர் ஆற்றிய அரசியல் பணி மற்றும் அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்ற ஆளுமைகளுடன் அவர் பழகிய அனுபவத்தால் கிடைத்தது. அவருக்குப் பின் வந்த நடிகர்கள் அனைவரும் ‘சினிமா பிம்பத்தை’ மட்டுமே நம்பி வந்ததால், தேர்தல் களத்தில் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 2026-ல் விஜய் இந்த வரலாற்றை மாற்றுவாரா அல்லது அவரும் முந்தைய நடிகர்களின் வரிசையில் இடம் பெறுவாரா என்பதை அவரது அரசியல் முதிர்ச்சியும், அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகளுமே தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
