யார் அந்த சார்? அண்ணா பல்கலை விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் அண்ணாமலை.. சுப்ரீம் கோர்ட் செல்கிறதா வழக்கு?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2024 டிசம்பரில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு, தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்த வழக்கில் தீர்ப்பும் வெளியாகிவிட்டது. ஆனால் இந்த தீர்ப்புக்குப் பின்னரும், இந்த வழக்கு…

annamalai 1

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2024 டிசம்பரில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு, தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்த வழக்கில் தீர்ப்பும் வெளியாகிவிட்டது. ஆனால் இந்த தீர்ப்புக்குப் பின்னரும், இந்த வழக்கு தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளும், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசிய சில கருத்துக்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபால் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அண்ணாமலை, ஆளும் தி.மு.க. அரசு இந்த வழக்கை மூடி மறைக்க முயன்றதாக குற்றம் சாட்டினார். குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்படுவதற்கு முன்பும், குற்ற சம்பவத்திற்குப் பிறகும், காவல்துறை அதிகாரி ஒருவருடனும், தி.மு.க.வின் முக்கிய பிரமுகருடனும் தொலைபேசியில் பேசியதற்கான அழைப்பு விவர பதிவுகள் தன்னிடம் இருப்பதாக அவர் பகிரங்கமாக தெரிவித்தார்.

குற்ற சம்பவம் நடந்த பின், ஞானசேகரன் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு 8:53 மணிக்கு அழைப்பு விடுத்ததாகவும், டிசம்பர் 24 அன்று தி.மு.க. நிர்வாகி கொட்டூர் சண்முகத்துடன் 13 முறை பேசியதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

பாலியல் தாக்குதலின்போது குற்றவாளி குறிப்பிட்ட “சார்” யார் என்ற கேள்வியை எழுப்பி, இந்த வழக்கில் சாட்சியங்களை அழிக்கும் முயற்சி நடந்திருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்தார். அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுகளால் அவர் மீதே சட்ட நடவடிக்கை கோரும் சூழல் உருவானது.

இந்த நிலையில் அண்ணாமலை தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறியதை அடுத்து, அவர் மீது விசாரணை நடத்த கோரி வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். : இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “அரசியல்வாதிகள் பேசுவதை கேட்டு வழக்குகளை தொடர முடியாது” என்றும், “அரசியல்வாதிகள் பேசுவதை புறக்கணிக்க வேண்டும்” என்றும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜன் என்பவர், தன்னை தொடர்புபடுத்திப் பேசியதாக கூறி, அண்ணாமலையிடம் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஒரு வழக்கறிஞர் நோட்டீஸையும் அனுப்பினார்.

மொத்தத்தில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்த பின்னரும், இந்த வழக்கில் உண்மையில் யார் யாருக்கு தொடர்பு என்ற கேள்வியை அண்ணாமலை எழுப்பியதன் மூலம், இந்த விவகாரம் தமிழக அரசியலில் நீண்டகாலம் நீடிக்கும் ஒரு விவாத பொருளாக மாறியது.

மேலும் இந்த வழக்கை மீண்டும் நடத்த சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லி இதனை சும்மா விடாது என்றும் டெல்லி ராஜகோபால் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.