தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதன் பங்கு குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. கடந்த தேர்தல்களில் “இரு கழகங்களும் வேண்டாம்” என்று நினைத்த நடுநிலை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் முதல் தேர்வாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இருந்தது. ஆனால், தற்போது கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டதால், அந்த ‘மாற்று அரசியல்’ தேடும் 3 முதல் 5 சதவீத வாக்குகள் அப்படியே விஜய்க்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் போன்றவர்கள் தங்கள் செல்வாக்கை இழந்து வரும் நிலையில், அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை விரும்புபவர்கள் விஜய்யை நோக்கி நகர்கிறார்கள். அமமுக போன்ற கட்சிகள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலே இந்த வாக்கு வங்கி மாற்றம் தான்.
விஜய் தரப்பில் ‘அதிகாரப் பகிர்வு’ என்ற ஆயுதத்தை முதலில் கையில் எடுத்ததே ஒரு தந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது மற்ற கூட்டணிகளில் உள்ள கட்சிகளிடையே பெரும் ஆசையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், பாமக, தேமுதிக என அனைத்து கட்சிகளும் இப்போது “அமைச்சரவையில் பங்கு” என்ற கோரிக்கையை எழுப்பத் தவெகதான் தூண்டுகோலாக அமைந்தது. ஆனாலும், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் விஜய்யுடன் கூட்டணி வைக்க தயங்குவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒரு சினிமா நட்சத்திரத்துடன் இணைவது தங்கள் அரசியல் முதிர்ச்சியை கேள்விக்குள்ளாக்குமோ என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், ஸ்டாலின் அல்லது எடப்பாடி பழனிசாமியை எளிதில் அணுகுவது போல விஜய்யை அணுக முடிவதில்லை என்ற பிம்பம் நிலவுகிறது. அவரை சுற்றி இருக்கும் ‘இரும்புத்திரை’ போன்ற பாதுகாப்பு வளையம் மற்ற அரசியல்வாதிகளை அந்நியப்பட வைக்கிறது.
கட்சியில் சீனியர்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்குமா என்ற சந்தேகமும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் தடையாக உள்ளது. உதாரணத்திற்கு, செங்கோட்டையன் போன்ற சீனியர்கள் தவெக-வில் இணைந்திருந்தாலும், புஸ்ஸி ஆனந்த் மற்றும் புதியவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற அரசியல் தலைவர்களை தயங்க வைக்கிறது. அதேநேரம், தவெகவின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது அதன் ஜாதி மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்ட பிம்பம். விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட், அவருக்கு ‘நெகட்டிவ் ஓட்டுகள்’ இல்லை என்பதுதான். பாமக அல்லது விசிக போன்ற கட்சிகள் ஒரு கூட்டணியில் இருந்தால், அதற்கு எதிரான சமூக வாக்குகள் சிதறும் வாய்ப்பு உண்டு. ஆனால், விஜய்க்கு ஜாதி ரீதியான எதிர்ப்பு ஓட்டுகள் கிடையாது என்பது அவருக்கு கூடுதல் பலம்.
விஜய் ‘ஜோசப் விஜய்’ என்று சில தரப்பினரால் விமர்சிக்கப்பட்டாலும், கிராமப்புறங்களில் அவர் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு வெகுஜன நாயகனாகவே பார்க்கப்படுகிறார். இந்த ‘நியூட்ரல்’ பிம்பம் அவருக்கு கணிசமான வாக்குகளை பெற்று தரும் என அரசியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனிடையே, திமுக தலைமை விஜய்யின் விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் அளிக்காமல் ஒரு ராஜதந்திர நகர்வை மேற்கொள்கிறது. முதலமைச்சர் ஸ்டாலினோ அல்லது உதயநிதியோ விஜய்யை பற்றிப் பேசாமல், ஆர்.எஸ். பாரதி போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களைப் பயன்படுத்தியே பதிலடி கொடுக்கிறார்கள். விஜய்யை நேரடியாக தாக்கினால், அவரை தங்களுக்கு சமமான போட்டியாளராக அங்கீகரிப்பது போலாகிவிடும் என்பதும், அந்த போட்டி இன்னும் பலப்பட்டுவிடும் என்பதும் திமுகவின் கணக்காக உள்ளது.
தங்களுக்கு போட்டியாக அதிமுகவை மட்டுமே முன்னிறுத்தினால், அரசுக்கு எதிரான எதிர்ப்பு ஓட்டுகள் விஜய்க்கு போகாமல் அதிமுகவுக்குச் செல்லும் என்றும், இதனால் திமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபோது, அவருக்கு கிடைத்த வரவேற்பு அக்கட்சியினரிடையே ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. “நமது கட்சிக்கு ஒரு அனுபவமிக்க சீனியர் வந்துவிட்டார்” என்ற பெருமிதம் விஜய் ரசிகர்களிடம் வெளிப்படையாக தெரிந்தது. இருப்பினும், சீனியர் தலைவர்களை கையாளும் விதத்தில் தவெக இன்னும் முதிர்ச்சி பெற வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. மேடைகளில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவது, வரும் காலங்களில் மற்ற சீனியர் தலைவர்களின் வருகையை குறைக்கக்கூடும்.
2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, திமுக ஒரு வலுவான கூட்டணியை வைத்திருந்தாலும், அந்த ஆட்சிக்கு எதிரான ஆட்சிக்கு எதிரான வாக்குகள் ஒரு பக்கம் சவாலாக உள்ளன. அந்த 60 சதவீத எதிர்ப்பு வாக்குகளில் விஜய் 40 சதவீதத்தைத் தாண்டினால், அவர் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவும் வாய்ப்புள்ளது என்று ஒரு தரப்பு வாதிடுகிறது. ஆனால், அந்த எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்க அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளும் களத்தில் இருப்பதால், வாக்குகள் சிதறக்கூடும். எது எப்படியிருப்பினும், 2026 தேர்தல் களம் என்பது வழக்கமான இருமுனைப் போட்டியாக இல்லாமல், விஜய்யின் வருகையால் ஒரு கடுமையான மும்முனை அல்லது நான்முனைப் போட்டியாக மாறி, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
