திமுக – தவெக இடையே தான் போட்டி.. விஜய் கூறியதன் உள்ளர்த்தம் என்ன? ஈபிஎஸ் புரிந்து கொள்வாரா?

  தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆவேசமாக பேசிய விஜய், தனது உரையின் முடிவில், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே தான்…

vijay tvk

 

தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆவேசமாக பேசிய விஜய், தனது உரையின் முடிவில், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே தான் போட்டி எனக் கூறினார்.

அவரது இந்த பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தாலும், விஜய்யின் பேச்சில் அதிமுகவுக்கு ஒரு மறைமுக செய்தி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதாவது, திமுகவுக்கு எதிரான ஒரு கூட்டணி அமைந்தால், அந்த கூட்டணிக்கு தமிழக வெற்றி கழகமே தலைமை ஏற்கும் என்பதைக் அவர் மறைமுகமாக கூறியுள்ளார். தங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும், அதற்கு விருப்பப்பட்டால் அதிமுக உள்பட மற்ற கட்சிகள் சேர்க்கப்படும், ஆனால் இன்னொரு கட்சியின் தலைமையில் தமிழக வெற்றி கழகம் இணையாது என்பதே விஜய்யின் மறைமுகமான செய்தி. இது எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு புரியுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதே நேரத்தில், “திமுகவுடன் தான் தங்களுக்கு ஒரே போட்டி” என்று கூறுவதற்குப் பின்னணி காரணமாக, முதலமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என்பதும் இருக்கலாம். ஏற்கெனவே இதே மேடையில் “2026 – விஜய் முதல்வர்” என புஸ்ஸி ஆனந்த் உறுதிபட கூறியிருந்ததால், முதலமைச்சர் வேட்பாளராக விஜய்யை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி ஏற்படும் என்பதையும் அவர் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைவது, மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என்பதையும் ஏற்றுக்கொள்பவர்களே கூட்டணியில் சேர்வார்கள் என்ற நிலை தெளிவாக உள்ளது. இந்த நிலையில், அதிமுக எவ்வாறு செயல்படப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.