சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, அதன் பின் உடல் நிலையை காரணம் காட்டி திடீரென பின்வாங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, அரசியல் களத்தில் குதித்துவிட்ட நிலையில், தற்போது நடைபெறும் சூழ்நிலையை பார்த்து, விஜய் அரசியலில் இருந்து பின்வாங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவுக்கு எதிரான ஒரு வலிமையான கூட்டணியை அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற விஜய், கண்டிப்பாக ஒரு கூட்டணியை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன்தான் அரசியல் களத்தில் நுழைந்தார். குறிப்பாக, அவர் மிகவும் நம்பியிருந்தது அதிமுகவைத்தான் என்றும், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. எனவே, தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற திட்டத்துடன் விஜய் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது, அதிமுக ,பாஜக கூட்டணியுடன் இணைந்துவிட்டதை அடுத்து, அந்த கூட்டணிக்கு செல்ல முடியாத நிலை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து பிரிவதாக தெரியவில்லை. எனவே, கூட்டணி இல்லாமல் தனித்து விடப்பட்டுள்ளதால், தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் விஜய்க்கு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அவர் ரஜினி போல் அரசியலில் இருந்து பின்வாங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு கருத்து பரவி வருகிறது.
ஆனால், விஜய் தரப்பினர் இதனை கண்டிப்பாக மறுத்துள்ளனர். தனியாக போட்டியிட்டாலும் எங்களால் ஜெயிக்க முடியும் என்றும், விஜய் கண்டிப்பாக முன்வைத்த காலைப் பின்வாங்க மாட்டார் என்றும், 2026ஆம் ஆண்டு தேர்தலில் ஒன்று ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி—இந்த இரண்டில் ஒன்று எங்களால் வர முடியும் என்றும் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.