விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் பணி செய்து கொண்டிருக்கும் நிலையில், அவரது முக்கிய இலக்கு அதிமுக, திமுக வாக்குகளை பிரிக்க வேண்டாம் என்றும், அது முடியாத காரியம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக, சிறுபான்மையர் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவை முழுமையாக திருப்பி விட்டால், ஆட்சியை பிடிக்க முடியும் என்று விஜய்க்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் இதுவரை கூட்டணி குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பதற்குக் காரணம், தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்ற அவரது நம்பிக்கையாக இருக்கலாம். மற்ற கட்சிகளின் வாக்குகளை பிரிக்க முயற்சிக்காமல், புதியவர்களின் வாக்குகளை முழுமையாக தனது கட்சிக்கு இழுக்க வேண்டும் என்பதே அவரது திட்டம் என கூறப்படுகிறது. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை முழுமையாக தனது பக்கம் இழுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே இளைஞர்களின் ஆதரவு தமிழக வெற்றி கழகத்திற்கே உள்ளது என்றும், அதனுடன் சிறுபான்மையர் வாக்குகளும் சேர்ந்தால், நிச்சயம் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற கணிப்பில் அவர் உள்ளதாக தெரிகிறது.
இந்த கணிப்பை பிரசாந்த் கிஷோரும் உறுதி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இருவரும் ஆலோசனை நடத்திய பிறகு, சிறுபான்மையர் மற்றும் புதிய வாக்காளர்களை குறிவைத்தே விஜய் தனது தேர்தல் இயக்கத்தை நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, விஜய்யின் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக அவரது கட்சிக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், ரசிகர்களின் குடும்ப வாக்குகளும் 50% வரை அவரது கட்சிக்கு செல்லும் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது. கூட்டணி ஒரு அளவுக்கு அமைந்தாலே போதும், கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நிகழும் என்று பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோரின் அரசியல் கணக்குகள் வெற்றி பெறுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.