இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஜோதிட நம்பிக்கை இருக்கிறது என்பதும், நமது எதிர்காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், மக்களின் இந்த மனநிலையை புரிந்து கொண்டே ஜோதிடர்கள் ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் தினமும் சம்பாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சீனாவின் டீப் சேக் (DeepSeek) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியது. இது, அமெரிக்காவின் பங்குச் சந்தையை ஆட்டம் செய்ய வைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, பல தொழில்கள் இந்த தொழில்நுட்பத்தால் நசிந்து வரும் சூழலில், தற்போது ஜோதிடத் துறைக்கும் டீப் சேக் ஆப்பு வைத்து விட்டதாக தெரிகிறது. டீப் சேக் தொழில்நுட்பத்துக்கு சென்று, நம்முடைய பிறந்த தேதி, வருடம், மற்றும் பிறந்த நேரத்தை சரியாக குறிப்பிட்டால், வெறும் 25 வினாடிகளில் நம்முடைய எதிர்காலத்தை கணித்து, நம் வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது என்பதை தெளிவாக கூறுவதாக தெரிகிறது.
ஏற்கனவே சீனாவில் பலர் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களுடைய எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். 2025 பிப்ரவரி மாதம் மட்டும் டீப் சேக் பிளாட்பார்மில் “ஜோதிடம்” என்ற வார்த்தை இரண்டு மில்லியன் முறைகளுக்கும் மேலாக தேடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இது சீனாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் அதிகமானோர் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களுடைய எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். இதனால், ஜோதிடம் பார்த்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி விட்டதாக கருதப்படுகிறது.
இன்னும் எத்தனை துறைகளுக்கு இந்த செயற்கை நுண்ணறிவு ஆப்பு வைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!