தமிழக வெற்றிக் கழக’ தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தில் புதிய உத்திகளை கையாண்டு வருகிறார். அவர் தனது பிரசாரத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலினை மட்டுமே நேரடியாக விமர்சித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. தி.மு.க.வின் மற்ற அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை அவர் விமர்சிப்பதில்லை. கூட்டணி கட்சி தலைவர்களையும் விமர்சனம் செய்வதில்லை. இந்த கூர்மையான வியூகத்தின் பின்னணி என்ன, அடுத்ததாக அவர் வரும் சனிக்கிழமை கரூரில் நிகழ்த்த போகும் பிரசாரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, எதிர்க்கட்சிகள் ஒரு ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது, அதன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மேயர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலரையும் குறிவைத்து விமர்சிப்பார்கள். ஆனால், விஜய் முற்றிலும் மாறுபட்ட பாதையில் பயணிக்கிறார். அவர் தி.மு.க. அமைச்சர்களின் பெயர்களை குறிப்பிடாமல், மாவட்டங்களின் உள்ளூர் பிரச்சினைகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறார். இது ஒரு குறிப்பிட்ட அமைச்சர் மீது தனிப்பட்ட தாக்குதலாக இல்லாமல், ஒட்டுமொத்த தி.மு.க. தலைமையின் மீதான விமர்சனமாக மாற்றப்பட்டுள்ளது.
அண்ணாமலை கூட முதல்வரையோ அல்லது குடும்பத்தையோ நேரடியாக தாக்காமல், மறைமுகமாகவே விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால், விஜய் “எனக்கு ஒரே எதிரி முதல்வர் மு.க. ஸ்டாலின் தான்” என்று தனது பிரசாரத்தை வடிவமைத்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது சினிமா உலகில் நம்பர் ஒன் ரஜினியை மட்டுமே குறிவைத்த உத்தியை போல, அரசியலிலும் நம்பர் ஒன் தலைவரை மட்டும் குறிவைத்து முன்னேறுவதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.
அரசியல் விமர்சகர்கள் சிலர், “ஒருவன் தனது எதிரியை யார் என்பதை தீர்மானித்துவிட்டால், அந்த எதிரியை வீழ்த்துவது சுலபமாகிவிடும்” என்ற தத்துவத்தை விஜய் பின்பற்றுவதாக கூறுகின்றனர். ஸ்டாலினை மட்டுமே தனது முக்கிய எதிரியாகக் கருதி, அவரை மட்டும் விமர்சிப்பதன் மூலம், தமிழக அரசியல் அரங்கில் தி.மு.க.வுக்கு மாற்று சக்தி தாமே என்பதை விஜய் நிலைநிறுத்த முயற்சிக்கிறார்.
விஜய் வரும் சனிக்கிழமை கரூருக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளார். கரூர் மாவட்டமானது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்படுகிறது. அவர் மீதான லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்குகள், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வால் பலமுறை விமர்சிக்கப்பட்டன. இந்த சூழலில், கரூரில் பிரசாரம் செய்ய வரும் விஜய், செந்தில் பாலாஜி தொடர்பான விவகாரங்களை வெளிப்படையாக பேச வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கரூரில் உள்ள தி.மு.க.வினருக்கு ஒரு புதிய சவாலாக இருக்கும்.
தி.மு.க.வின் கோட்டைகளில் ஒன்றான கரூரில், விஜய் எவ்வாறு செந்தில் பாலாஜி மற்றும் உள்ளூர் பிரச்சினைகளை அணுக போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த பிரசாரம் கரூரில் உள்ள தி.மு.க. ஆதரவாளர்களின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
