அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றுள்ள நிலையில், அவர் பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து கூட்டணியைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைய பாஜக பல முயற்சிகள் செய்து வந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
அவர், “விஜயுடன் கூட்டணி சேர்ந்தால் போதும்” என்ற எண்ணத்தில் இருந்த நிலையில், விஜய் தரப்பில் இருந்து எந்த விதமான பச்சை கொடியும் காட்டப்படவில்லை. தற்போதைய சூழலில், விஜய் தனித்து போட்டியிடலாம் என்று திட்டமிட்டு இருப்பதாகவும், அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட்டால் அது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி அந்த கூட்டணி வீழ்ச்சி அடையும் என்றும் அவர் கணிப்பதாக கூறப்படுகிறது.
எனவே, “திமுக கூட்டணிக்கு ஒரே போட்டி நாமாக தான் இருப்போம்” என்று விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், விஜய் கட்சியின் கூட்டணிக்காக காத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி இனிமேலும் பொறுக்க முடியாமல், தான் டெல்லி சென்றதாகவும், அங்கு அவர் பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்வார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், அண்ணாமலை ஒரு பிரச்சனையாக இருப்பார் என்பதால், அது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இருந்து திரும்பும் போது, கிட்டத்தட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டுத்தான் வருவார் என்று கூறப்படுவது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.