கரூரில் செந்தில் பாலாஜி.. நாமக்கல்லில் உதயநிதி.. முதல்முறையாக உதயநிதியை அட்டாக் செய்வாரா விஜய்.. இனி ஒவ்வொரு கூட்டத்திலும் அட்டாக் ஸ்டாலின், உதயநிதி மீது தான்.. டார்கெட் பிக்ஸ் பண்ணியாச்சு.. பிப்ரவரிக்குள் துவம்சம்..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை திட்டமிட்டுள்ளதாகவும், இனிவரும் கூட்டங்களில் ஆளும் திமுகவின் தலைமை பொறுப்பில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை…

vijay vs udhayanidhi

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை திட்டமிட்டுள்ளதாகவும், இனிவரும் கூட்டங்களில் ஆளும் திமுகவின் தலைமை பொறுப்பில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரடியாக குறிவைத்து தாக்குவார் எனவும் தவெக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூரில் அண்மையில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழா, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதற்கடுத்த வாரமே, அதே கரூரில் விஜய்யும் தனது முதல் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இது, ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கு நேரடியான சவால் விடுக்கும் ஒரு நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

முன்னதாக, விஜய்யின் அரசியல் குறித்து உதயநிதி “நான் சினிமா செய்திகளை படிப்பதில்லை” என்று நக்கலாக விமர்சித்திருந்தார். ஆனால், விஜய்யின் சுற்றுப்பயணங்கள் மற்றும் மக்கள் ஆதரவை கண்டு திமுக தரப்பு தற்போது பதற்றமடைந்துள்ளதாகவும், அதனால்தான் விஜய்க்கு எதிராக தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கரூரில் நடத்தப்படும் இந்தக் கூட்டம், இந்த விமர்சனங்களுக்கு விஜய் கொடுக்கும் பதிலடியாகவும், உதயநிதிக்கு நேரடியான சவால் விடுத்ததாகவும் அமையும். இனி உதயநிதி சினிமா செய்திகளை பார்க்கிறாரோ இல்லையோ, விஜய் செய்திகளை பார்த்தே தீருவார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தனது சுற்றுப்பயணங்களை, திமுகவின் கோட்டைகளாக கருதப்படும் மாவட்டங்களில் திட்டமிட்டு நடத்துகிறார். ஏற்கனவே, கே.என்.நேருவின் கோட்டையான திருச்சியிலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரிலும் விஜய் கூட்டங்களை நடத்தி, தனது செல்வாக்கை நிலைநாட்டியுள்ளார்.

அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்படும் கரூரில், திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்ற அதே இடத்தில், விஜய்யும் கூட்டம் நடத்தி, தனது பலத்தை காட்ட முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் அமைச்சர் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திமுக தலைமைகே ஒரு மறைமுக சவால் விடுக்கும் செயலாக கருதப்படுகிறது.

விஜய்யின் இந்த புதிய வியூகத்தின்படி, இனிவரும் ஒவ்வொரு கூட்டத்திலும் அவரது பேச்சின் மையப் புள்ளி மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை நோக்கி இருக்கும். தற்போது, திமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள் விஜய்யை விமர்சித்துவரும் நிலையில், நேரடியாக தலைமை பொறுப்பில் உள்ளவர்களை விமர்சிப்பதன் மூலம், அவர்களை தங்களின் பேச்சுகளுக்குப் பதிலளிக்க வைக்க வேண்டும் என்பதே விஜய்யின் நோக்கமாக உள்ளது. விஜய்க்கு நேரடியாக முதல்வர் ஸ்டாலினோ அல்லது துணை முதல்வர் உதயநிதியோ பதிலளித்துவிட்டால் அதுவே விஜய்க்கு பெரிய வெற்றியாக கருதப்படும்.

விஜய்யின் டைரக்ட் அட்டாக் அணுகுமுறை, அவரது அரசியல் பயணத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், அடுத்த பிப்ரவரிக்குள் அரசியல் களத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.