தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஒரு விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைந்திருப்பது, ஏற்கனவே அந்த கூட்டணியில் பல ஆண்டுகளாக இருக்கும் கட்சிகளிடையே ஒருவித அசௌகரியத்தை உருவாக்கியுள்ளது. பலமான நிலையில் இருப்பதாக கூறப்படும் திமுக கூட்டணியில், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகள் என்ற தேமுதிகவின் பேரம், மற்ற கூட்டணி கட்சிகளின் உரிமைகளை பறிப்பதாக இருக்குமோ என்ற அச்சம் கிளம்பியுள்ளது.
இந்த கூட்டணியில் பெரும் புயலைக் கிளப்பக்கூடிய விஷயமாக பார்க்கப்படுவது ‘ராஜ்யசபா சீட்’ விவகாரம் தான். கடந்த பல ஆண்டுகளாக திமுகவுடன் பயணிக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வழங்கப்படாத ஒரு முக்கியத்துவத்தை, இப்போது தான் கூட்டணிக்குள் வந்திருக்கும் எல்.கே.சுதீஷுக்கு திமுக வழங்கினால், அது வைகோவின் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தும். ஏற்கனவே ராஜ்யசபா சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் மதிமுக, சுதீஷுக்கு ஜாக்பாட் அடிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்ற கேள்வி எழுகிறது. இது வைகோவின் அரசியல் கௌரவத்தை சறுக்கச் செய்யும் செயலாக அமையலாம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதே நிலைதான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் கொள்கை ரீதியாகவும் தேர்தல் ரீதியாகவும் உறுதியாக நிற்கும் விசிகவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட, வெறும் 0.4% வாக்கு வங்கியை கொண்டுள்ள தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கப்பட்டால், அது திருமாவளவனை கோபப்படுத்தாமல் இருக்காது. “10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் பெறுவதற்கு தேமுதிகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்ற கேள்வி கணைகள் இப்போதே கூட்டணிக்குள் இருந்து எழ தொடங்கிவிட்டன.
தேமுதிகவின் வரவை திருமாவளவன் மற்றும் வைகோ போன்றவர்கள் மேலோட்டமாக வரவேற்றாலும், தொகுதி பங்கீடு மற்றும் அதிகார பகிர்வின் போது நிஜமான மோதல் வெடிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தேமுதிகவின் முக்கிய முகமாக பார்க்கப்படும் விஜய பிரபாகரன் இந்த விவகாரங்களில் இன்னும் மௌனம் காப்பது தான். தனது தாயார் எடுக்கும் முடிவுகள் மற்றும் திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து அவர் இதுவரை வெளிப்படையான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை இந்த மௌனம், கட்சிக்குள் நிலவும் ஏதேனும் ஒரு அதிருப்தியின் வெளிப்பாடா அல்லது இறுதி முடிவு வரும் வரை காத்திருக்கும் ஒரு வியூகமா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். விஜய பிரபாகரனின் அமைதி, தேமுதிகவின் அடுத்தகட்ட நகர்வுகளில் ஏதோ ஒரு திருப்பம் இருப்பதை உணர்த்துகிறது.
இறுதியாக, 2026 தேர்தல் என்பது திமுகவுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் சூழலில், புதிய கூட்டாளிகளை சேர்ப்பது ஆளுங்கட்சிக்கு பலம் தருவதை விட, பழைய கூட்டாளிகளை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. பிரேமலதாவின் வருகையும், எல்.கே.சுதீஷுக்கான முக்கியத்துவமும் திமுக கூட்டணியின் அஸ்திவாரத்தையே அசைக்கக்கூடும். திருமாவளவன், வைகோ போன்ற மூத்த தலைவர்கள் தங்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில், ஒரு புதிய அரசியல் கூட்டணியை நோக்கி நகரக்கூடும் என்பதே தற்போதைய கள நிலவரம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
