தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் களம், வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மும்முனை போராட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. திராவிட பேரியக்கங்களான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு இடையே, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, தற்போதைய சூழலில் ஆளுங்கட்சியான திமுகவிற்கும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் பொதுவான மற்றும் முதல் எதிரியாக விஜய் உருவெடுத்துள்ளார். இதுநாள் வரை ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்த திராவிட கட்சிகள், இப்போது விஜய்யின் அரசியல் வருகையை தடுக்க அல்லது அவரது வாக்கு வங்கியை சிதைக்க மறைமுகமாக ஒருமித்த கருத்தை கொண்டிருப்பதாக தெரிகிறது.
தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களின் பலமான வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள விஜய்யை நோக்கி தங்களின் விமர்சன கணைகளை தொடுக்க ஆரம்பித்துள்ளன. “அரசியல் என்பது சினிமா கிடையாது” என்ற ரீதியில் இரு தரப்பிலிருந்தும் எழும் விமர்சனங்கள், தவெகவை ஒரு முதிர்ச்சியற்ற கட்சியாக காட்ட முயல்கின்றன. தேர்தல் களத்தில் இந்த இரு ஜாம்பவான்களும் தங்களுக்குள் இருக்கும் பகையை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, மூன்றாவதாக வரும் ஒரு சக்தியை வீழ்த்துவதில் ஒன்றுபடுவார்கள் என்பது அரசியல் பார்வையாளர்களின் பலமான வாதமாக உள்ளது. இது தவெகவிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
வேட்புமனு தாக்கல் செய்வதில் தொடங்கி, தேர்தல் நாளன்று பூத் மேனேஜ்மென்ட் செய்வது வரை ஒரு அரசியல் கட்சிக்கு தேவையான களப்பணி அனுபவம் தவெகவிற்கு மிக குறைவு. பல ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் ஊறிப்போன திமுக மற்றும் அதிமுகவிடம் லட்சக்கணக்கான கிளைக் கழக நிர்வாகிகளும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் உள்ளனர். ஆனால், தவெக இன்னும் தனது உட்கட்டமைப்பை முழுமையாக கட்டமைக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் சட்ட நுணுக்கங்கள், வேட்புமனுவில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தேர்தல் நாளன்று நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை சமாளிக்க தவெகவில் போதிய அனுபவமிக்க நிர்வாகிகள் இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டும் மற்றொரு முக்கிய அம்சம், தேர்தல் களத்தில் நிலவும் ‘பண பலம்’ மற்றும் ‘நிர்வாக பலம்’. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் செலவினங்களிலும், அடிமட்ட தொண்டர்களை ஒருங்கிணைப்பதிலும் அசுர பலம் கொண்டவை. வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ய வைப்பது முதல், கடைசி நேரத்தில் வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பது வரை அனைத்து வித்தைகளும் தெரிந்த இந்த இரு கட்சிகளையும் ஒரே நேரத்தில் எதிர்ப்பது என்பது ஒரு புதிய கட்சிக்கு இமயமலை சிகரத்தை தொடுவதற்கு சமமாகும். இந்த ‘அரசியல் சதுரங்கத்தில்’ விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் எந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள் என்பது கேள்விக்குறியே.
விமர்சகர்களின் கூற்றுப்படி, இத்தனை தடைகளையும் தாண்டி விஜய் வெற்றி பெற்றால், அது இந்திய அரசியலில் மட்டுமல்ல, உலக அரசியலிலேயே ஒரு ‘மகா அதிசயம்’ என்றுதான் கருதப்படும். எம்.ஜி.ஆர் அல்லது என்.டி.ஆர் போன்ற சினிமா ஜாம்பவான்கள் அரசியலில் வென்றபோது இருந்த சூழல் வேறு; சமூக ஊடகங்களும், மிக தீவிரமான அரசியல் விழிப்புணர்வும் கொண்ட இன்றைய சூழல் முற்றிலும் வேறுபட்டது. அனுபவம் வாய்ந்த இரு கட்சிகளின் வியூகங்களை உடைத்து, ஒரு புதிய கட்சி முதல் தேர்தலிலேயே கோட்டையை பிடிப்பது என்பது கற்பனைக்கும் எட்டாத ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பினால் எந்த ஒரு அதிசயமும் சாத்தியமே. 2026-ஆம் ஆண்டு மே மாதம் வெளிவரப்போகும் தேர்தல் முடிவுகள், விஜய்யின் ‘வெற்றி நடை’ தொடருமா அல்லது திராவிட கோட்டைகள் தகர்க்க முடியாதவையா என்பதை தீர்மானிக்கும். தற்போதைக்கு, தவெக எதிர்கொள்ள வேண்டியது வெறும் தேர்தலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இரு பெரும் அரசியல் சாம்ராஜ்யங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் தான். இந்த சோதனைகளை தாண்டி விஜய் சரித்திரம் படைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

