தூத்துக்குடியைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் என்ற விஏஓ பட்டப்பகலில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளாக மணல் கடத்தல் அதிகமாகி வருகிறது என்றும் அதனை தடுக்க விஏஓ லூர்து பிரான்சிஸ் என்பவர் அதிரடி நடவடிக்கை எடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மணல் கடத்தல் குறித்து விஏஓ பிரான்சிஸ் புகார் அளித்ததாகவும் இதையடுத்து அவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு சிலரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் பணியின் போது மர்ம நபர்களால் கொல்லப்பட்ட விஏஓ பிரான்சிஸ் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஒரு கோடி நிதியுதவி அளித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் இந்த கொலை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய போது ’சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு அரசு அலுவலருக்கே இத்தகைய நிலை எனில் பாமர மக்களுக்கு பாதுகாப்பு எங்கே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தூத்துக்குடி விஏஓ வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தெரிந்தவுடன் அவரது குடும்பத்தினரை தூத்துக்குடி எம்பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.