இனி 10 வருஷத்துக்கு வண்டி ஓட்ட முடியாது… டி.டி.எஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து..!

Published:

யூடியூப் பிரபலம் டி.டி.எஃப் வாசன் சமீபத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவர் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்து காவல்துறையினர் அவர் மீது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது என்ற பிரிவு உள்பட ஒரு சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து டி.டி.எஃப் வாசன் ஓரிருமுறை ஜாமின் மனு தாக்கல் செய்த போதிலும் அந்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி டி.டி.எஃப் வாசன் மீது கடும் காட்டமாக கருத்து தெரிவித்தார். விளம்பரத்திற்காக செயல்படும் வகையில் உள்ள டி.டி.எஃப் வாசன் யூடியூப் பக்கத்தை மூடிவிட வேண்டும் என்றும் அவரது பைக்கையும் எரித்து விட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த ஜாமீன் மனு குறித்து காவல்துறை தரப்பில் தெரிவித்த போது மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உடையால்தான் அவர் உயிர் தப்பியுள்ளார் என்றும் இவரை பின்தொடரும் பலர் அதிவேகமாக பைக் ஓட்டும் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்றும், அது சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக ஆகிவிடும் என்றும், எனவே இவரை ஜாமீனில் வெளி விடக்கூடாது என்றும் வாதிட்டனர். அந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி டி.டி.எஃப் வாசன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அதிரடியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆர்டிஓ டி.டி.எஃப் வாசன் ஓட்டுனர் உரிமையை ரத்து செய்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு டி.டி.எஃப் வாசன் இனிமேல் வாகனம் ஓட்ட முடியாது என்று போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே அவர் 2033 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி வரை எந்த வாகனத்தையும் ஓட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் வாழ்க்கையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க அவர் பைக் ஓட்டும் காட்சிகளில்தான் நடிக்க உள்ளார். தற்போது அவருடைய லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தில் அவர் தொடர்ந்து நடிப்பாரா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே இந்த படம் டிராப் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பொதுமக்கள் செல்லும் சாலையில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதால் டி.டி.எஃப் வாசன் தற்போது அவருடைய வாழ்க்கையை தொலைத்து உள்ளதாக கூறப்படுகிறது. ஜாமீன் பெற்றாலும் அவருக்கு இந்த வழக்கில் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுவதால் அவர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையில் கழிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய இளைஞர்கள் பைக்கை வைத்து சாகசம் செய்ய முற்படாமல் பைக்கை சாலையில் செல்லும் ஒரு வாகனமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதற்கு டி.டி.எஃப் வாசன் வாழ்க்கை ஒரு உதாரணமாக உள்ளது.

மேலும் உங்களுக்காக...